சட்டவலுவுள்ள தீர்ப்பாயம் ஒன்றை ஐ. நா. செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்!

0
305

“ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை” இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து “நடந்தது இனப்படுகொலை” தான் என்று நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்தது என்ன? என்ற கேள்வியை அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடமும் அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களிடமும் முன்வைத்தபோது, அவர்கள் முன்வைத்த கருத்துக்கள்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு இலங்கைத்தீவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்களை திரட்டி அதனை சத்தியக் கடதாசிகளாக மாற்றி அனுப்பி வைத்திருக்கின்றோம். அந்த செயல்திட்டத்தை செய்த ஒரேயொரு கட்சி நாங்கள் மட்டும் தான்.

தமிழ் மக்கள் சார்பில் பேசுகின்ற உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தரப்புக்கள் இனப்படுகொலை என்கிற விடயத்தை நிராகரித்துக் கொண்டு கருத்து தெரிவிப்பதால் நாங்கள் எந்த முயற்சிகளை எடுத்தாலும் அது பெரியளவில் ஏற்றுக் கொள்கின்ற ஒரு விடயமாக இல்லாமல் வெறுமனே ஒரு பேச்சுப் பொருளாக மட்டும் தான் இதுவரைக்கும் இருக்கிறது. அந்த நிலமை வெகு விரைவில் மாறும் என்கிற நம்பிக்கையில் நாங்கள் இருக்கின்றோம்.

புலம்பெயர் தமிழ் மக்கள் இரண்டு தீர்ப்பாயங்களை வைத்திருந்தார்கள். ஒன்று ரோமின் டப்ளின் தீர்ப்பாயம். இரண்டாவது ஜேர்மனியின் பிரேமன் தீர்ப்பாயம். இவை சட்ட அங்கீகாரம் பெற்ற தீர்ப்பாயங்கள் எவ்வாறு செயல்படுமோ அவ்வாறான பொறிமுறைகளைக் கையாண்டு தான் அந்த தீர்ப்பாயங்கள் நடாத்தப்படுகின்றன. சர்வதேச நீதிபதிகள் தான் அந்த வழக்குகளை விசாரித்தார்கள். அங்கு நிறைய சாட்சிகளை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கொண்டு சேர்த்தார்கள். அந்த இரண்டு தீர்ப்பாயங்களிலும் இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கிறது என்கிற விடயம் நீதிபதிகளால் சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஒரு சட்டவலுவுள்ள தீர்ப்பாயம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். சர்வதேச சட்டங்கள், சர்வதேச நீதிமன்றப் பொறிமுறைகள் எல்லாமே பூகோள அரசியலால் நகர்த்தப்படுகின்ற விடயமாக இருப்பதனால் எங்களுக்கான நீதி தாமதப்பட்டுக் கொண்டே செல்கின்றது.
என அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here