பிரான்ஸில் மக்கள் நடமாடுகின்ற மூடிய பொது இடங்களில் ( lieu public clos) மாஸ்க் அணிவது ஒகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் என்று அதிபர் மக்ரோன் நேற்றைய தொலைக்காட்சி நேர்காணலில் அறிவித்தார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்கொள்ளவும் தடுக்கவும் நாடு தயாராக உள்ளது என்றும் அவர் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திர தினமான நேற்று TF1 தொலைக்காட்சியின் மூத்த ஊடகவியலாளர் Gilles Bouleau, France 2 தொலைக்காட்சியின் முக்கிய பெண் ஊடகவியலாளர் Léa Salamé ஆகிய இருவரும் கூட்டாக அதிபர் மக்ரோனை செவ்வி கண்டனர். இந்த விசேட நேர்முக நிகழ்ச்சி அரச மற்றும் தனியார் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகியது.
வைரஸ் பரவலின் இரண்டாவது அலை பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த மக்ரோன், மக்கள் தமது நடமாட்டங்களின் போது இயன்றவரை மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தினார்.
தற்சமயம் பொதுப்போக்குவரத்துகளில் மட்டுமே மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட் டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மருத்துவமனைகள், பொலீஸ் நிலையங்கள், நகரமண்டபங்கள்,வங்கிகள் தபால்நிலையம் போன்ற பொது இடங்களிலும் அலுவல கங்களிலும் கூட மாஸ்க் அணிவது கட்டாய மாக்கப்படவுள்ளது.
கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டிய மூடிய பொது இடங்கள் (lieu public clos) என்ற வரையறைக்குள் வருகின்ற இடங்களின் விவரங்கள் விரைவில் பட்டியலிடப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும்.
மத வழிபாட்டு மையங்கள், கடைகள், வணிக வளாகங்கள், அருங்காட்சியகங்கள், மற்றும் பொதுமக்களின் வருகைக்காகத் திறந்திருக்கின்ற எல்லா அலுவலகங்களும் இந்தப் பட்டியலில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பொது முடக்கத்தில் இருந்து விடுபட்டுள்ள போதிலும் பல பகுதிகளிலும் வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இந்தக் கோடை விடுமுறைக் காலத்தில் அதன் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் மூலம் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
15-07-2020
புதன்கிழமை.
(குமாரதாஸன்)