இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் முறையாக புகழ்மிக்க சோம்ப்ஸ்எலிசே வீதியில் அணிவகுப்புகள் தவிர்க்கப்பட்டு, பிளாஸ் து லா கொன்கோர்ட் பகுதியில் இன்றைய தேசியநாள் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கொரொனா தொற்று நெருக்கடி காரணமாக இத்தகைய மாற்றங்களுடன் கலந்துகொள்வோர் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வையும் தவிர்க்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 வைரஸ் நோயால் இறந்தோர், அதற்கு எதிராக உயிரை பணயம் வைத்து போராடிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் விசேட மரியாதை செலுத்தப்பட்டு இன்றைய காலை நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர், அதிபர் இம்மானுவல் மக்கரோன், முதல் முறையாக நேரடித் தொலைக்காட்சி கேள்வி பதில் நிகழ்வில் கலந்து கொள்கிறார். மதியம் 13:10 க்கு ஆரம்பமாகும் இவ் நேர்காணல் 45 நிமிடங்கள் வரை இடம்பெறும். 2017ம் ஆண்டு அதிபராக பதவியேற்ற பின்னர் மக்கரோன் அவர்கள் தோன்றும் நேரடி நேர்காணல் இதுவாகும்.
வாண வேடிக்கைகள், பிரமாண்ட இசை நிகழ்வுகள் என வெகு சிறப்பாக நடைபெறவேண்டிய இன்றைய நாள், பல இடங்களிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.