பிரான்ஸின் சுதந்திர தினமான நாளை செவ்வாய்க்கிழமை அதிபர் எமனுவல் மக்ரோன் விசேட தொலைக்காட்சி நேர்முக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார்.
TF1 தொலைக்காட்சியின் மூத்த ஊடகவியலாளர் Gilles Bouleau, France 2 தொலைக்காட்சியின் முக்கிய பெண் ஊடகவியலாளர் Léa Salamé ஆகிய இருவரும் கூட்டாக அதிபர் மக்ரோனை செவ்வி காண்கின்றனர்.
அதிபரின் இந்த விசேட நேர்முகம் சுதந்திர தின வைபவங்கள் முடிவடைந்ததும் நண்பகல் ஒரு மணி முதல் சுமார் 45 நிமிட நேரம் அரச மற்றும் தனியார் தொலைக் காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் சுதந்திர நாளில் நாட்டின் அதிபர்கள் இவ்வாறு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றுவது வழமை என்றாலும் தற்போதைய அதிபர் மக்ரோன் தனது பதவிக்காலத்தில் நேர்முக நிகழ்ச்சி ஒன்றில் தோன்றி ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த நேர்முக நிகழ்ச்சியில் அதிபர் மக்ரோன் வைரஸ் பரவலின் அடுத்த கட்டம், சுகாதார நெருக்கடி உருவாக்கியிருக்கும் பெரும் பொருளாதாரச் சிக்கல்கள், இளையோரின் தொழில் வாய்ப்புகள், பாதுகாப்பு, புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பான சர்ச்சைகள் உட்பட பல சிக்கலான விவகாரங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
13-07-2020 திங்கட்கிழமை – குமாரதாஸன்.