பிரான்ஸில் ‘கோவிட் 19’ வைரஸ் தொற்றைக் கண்டறிய உதவும் நோய் எதிர்ப்புசக்தி பரிசோதனையை இனிமேல் மருந்தகங் களிலும் (Les pharmacies) செய்துகொள்ள முடியும்.
நேற்று சனிக்கிழமை தொடக்கம் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உடலில் வைரஸ் தொற்றியதை வெளிப்படுத்தும் அறிகுறியாக நோய் எதிர்ப்பு சக்தி (Antibodies) தூண்டப்பட்டி ருக்கிறதா என்பதைக் கண்டறியும் TROD எனப்படும் துரித பரிசோதனைகளை(Rapid Diagnostic Guidance Tests) மேற்கொள்வ தற்கே மருந்தகங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இப்பரிசோதனைகள் மருத்துவமனை களிலும் மருத்துவ ஆய்வு கூடங்களிலும் மட்டுமே செய்யப்பட்டுவந்தன.
இனிமேல் எவரும் தமது உடலின் எதிர்ப்பு சக்தி தூண்டலை அறிந்து கொள்ள மருந்தகங்களை நாட முடியும். விரலின் நுனியில் குத்திப் பெறப்படும் ஒரு துளி இரத்தத்தின் மூலம் சில நிமிட நேரத்தில் இப்பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ளலாம்.
எளிய முறையிலான இந்த சோதனையில் உடலில் நோய் எதிர்ப்பு அணுக்கள் தூண்டப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் பின்னர் ஆய்வு கூடங்களை நாடி முறைப்படியான வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.
மருந்தகங்களில் இப்பரிசோதனையை செய்வதற்கு எதிர்வரும் ஒக்ரோபர் 30 ஆம் திகதிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
12-07-2020
ஞாயிற்றுக்கிழமை.
குமாரதாஸன்