சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற கண்டிப்பான சுகாதார விதிகள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படாவிட்டால் இந்தக் கோடை விடுமுறைக் காலத்தில் வைரஸ் மீண்டும் தீவிரமாக திரும்பிவரும் ஆபத்து உள்ளது.
‘கொவிட் 19’ தொடர்பாக பிரெஞ்சு அரசுக்கு ஆலோசனைகளை வழங்க நியமிக்கப்பட்ட அறிவியல் குழு ( Conseil scientifique) மேற்கண்டவாறு எச்சரிக்கை செய்திருக் கிறது.
பொதுமுடக்கம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் ஆட்களுக்கு இடையே இடைவெளி பேணுதல், மாஸ்க் அணிதல் போன்ற சுகாதார விதிகள் தளர்த்தப்படவில்லை. ஆனால் பொதுவாக மக்கள் மத்தியில் இந்த விதிகளைப் பேணுவதில் தளர்வுகள் அவதானிக்கப்பட்டிருக்கிறது. தனிநபர் நடத்தைகளில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் மீண்டும் வைரஸ் தீவிரமாகப் பரவக்கூடிய ஏதுநிலைகளை உருவாக்கி இருக்கிறது.
இறப்புக்களிலும் தொற்றுக்களிலும் ஏற்பட்ட சரிவைக் கண்டு சுகாதார விதிகள் இனி அவசியம் இல்லை என்ற எண்ணம் எழுவது தெரிகிறது. ஆனால் வைரஸ் முற்றாக நீங்கிப் போய்விடவில்லை.
பொது நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையானோர் நெருக்கமாக கூடுவதையும் முத்தமிடுதல், கட்டியணைத்தல் போன்ற சமூக இடைவெளி மீறல்களையும் எங்கும் அவதானிக்க முடிகிறது.
இந்த விதி மீறல்களால் கோடை விடுமுறைக் காலப்பகுதியில் வைரஸ் மீண்டும் தீவிரமாக திரும்பிப் பரவக் கூடும்.
-இவ்வாறு அறிவியல் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக வேண்டும் என்று சுகாதாரப் பணிப்பாளர் நாயகமான Jérôme Salomon அவர்களும் பத்திரிகைப் பேட்டி ஒன்றில் எச்சரித்திருக்கிறார்.
இதேவேளை –
வைரஸின் இரண்டாவது கட்ட அலையை எதிர்கொள்ள நேர்ந்தாலும் நாட்டை முன்னர் போன்று முழுமையாக முடக்கும் திட்டம் இனி இருக்காது. நிலைமைக்கு ஏற்ப தொற்றுப்பரவும் மையங்கள் பகுதியாக முடக்கப்படும் என்று பிரதமர் Jean Castex தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமுடக்கத்தில் இருந்து நாட்டை வெளியேற்றுவதற்கும் தேவை ஏற்பட்டால் மீண்டும் முடக்குவதற்கும் வேண்டிய தேசிய பெரும் திட்டத்தை வகுத்தவர் Jean Castex என்பதும் கவனிக்கத்தக்கது.
09-07-2020
வியாழக்கிழமை – குமாரதாஸன்