03.06.2015
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பிரான்சு Neuilly – sur -Marne நகரினை வதிவிடமாகக் கொண்டவரும், Neuilly – sur -Marne தமிழ்ச்சங்கத்தின் முன்னை நாள் தலைவராகவும் (1997 – 2001) பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னை நாள் தலைவராகவும் (2013 – 2015) இருந்த எமது செயற்பாட்டாளர் கந்தையா சிவராஜா அவர்கள் 31.05.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார். அவர்களின் இழப்பானது எமக்கொரு பேரிடியையும், தாங்கொணாத் துயரினையும் தந்துள்ளது.
நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா ஒரு சிறந்த தேசப்பற்றாளர், தேசநல விடுதலை விரும்பி என்பதுடன் இவர் எமது தேச விடுதலைக்காக அயராது தனது பங்களிப்பைச் செய்துள்ளார். தமிழீழத்தில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் போராட்ட காலத்தில் தன்னால் முடிந்த நிதிப்பங்களிப்பையும் தானாக முன்வந்து செய்த பெருமையும் அவரைச் சாரும்.
2007 இல் பிரான்சில் எமது செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டபின்னர், தானாகவே முன்வந்து எமது செயற்பாடுகளுக்கு புத்தூக்கம் அளித்தது மட்டுமல்லாமல் தாயகத்தில் மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரை எமது மக்கள் சிறிலங்கா அரசினால் இனப் படுகொலை செய்யப்பட்டபோது, இரவு பகல் பாராமல் எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் அயராது பங்களித்தவர் நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
காலத்திற்குக் காலம் எமது தாயகம் நோக்கிய விடுதலைச் செயற்பாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராகிய எம்முடன் இணைந்து பல்வேறு வழிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்;. அவரின் உன்னத செயற்பாட்டிற்கமையவே நாட்டுப்பற்றாளர் என்ற உயரிய மதிப்பளித்தல் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா தேசியத்தின்பால் உறுதிமிக்க நெஞ்சுரம் கொண்ட தேசாபிமானி. துன்பப்படும் எமது மக்களுக்கு உதவும் மனங்கொண்டவர். அதுபோல் வாழ்ந்தும் காட்டியவர். இல்லை என அவர் முன் எவர் வந்தாலும் இல்லையெனாது உதவிடும் பாங்குள்ளவர்.
எம் தாயகத்தில் தேசிய அடையாளங்கள் சிறிலங்கா இனவாதிகளால் உடைத்து அழிக்கப்பட்டபோது, மனம் வெதும்பி விம்மியதுடன் நிற்காமல் இதற்கு நாம் மாற்றுவழி தேடவேண்டும் என்பதில் முனைப்புக் கொண்டவர்.
தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்புப் பற்றி அதீத நம்பிக்கையும் அவர்மேல் அதீத பற்றுறுதியும் கொண்டவர்.செயற்பாட்டில் நேரம் தவறாத பண்பும் நேர்த்தியான கடமையும் சொல்லில் உறுதியும் கொண்டது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் நடக்கவேண்டும் என வலியுறுத்துவார்.
தமிழ்த் தேசிய ஊடகங்கள் மீது மிகுந்த நாட்டம் கொண்டதுடன், தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு சரியான பாதையில் பேனாவை ஆயுதமாக எடுக்கவேண்டும் என ஊடகவிய லாளர்களுக்கு உரிமையுடன் எடுத்துரைப்பார்.
எமது எதிர்கால சந்ததியினர் புலம்பெயர் மண்ணில் தம் வாழிட மொழியோடு, அந்நியச் சூழ்நிலையில் தமது மொழி, பண்பாடு, கலாசார, விழுமியங்கள், வரலாறு என்பவற்றை மறந்துவிடாது, எமது தமிழ் அடையாளங்கள் அழிந்துபோகாமல் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற தேசிய சிந்தனையோடு தமிழ்ச்சோலைப் பள்ளியை திறம்பட நிர்வகித்தது மட்டுமல்லாது, தனது பிள்ளைகளையும் பாடசாலையில் இணைத்து முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் எக்காலத்திலும் தன்னை இணைத்துக் கொள்வதற்குத் தயாராக இருப்பதாக உறுதிபடத் தெரிவித்தவர்.
இவரின் இழப்பால் கவலையும் கண்ணீரோடும் நிற்கும் நாம் எங்கள் தலைகளைத் தாழ்த்தி வீரவணக்கம் செலுத்துகிறோம். இவரின் இழப்பானது அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமான தமிழினத்திற்குமே. அன்னாரின் பிரிவின் துயரில் வாடி நிற்கும் அவர்தம் குடும்பத்தினருடனும் மற்றும் அனைவரோடும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராகிய நாமும் எமது துயரினைப் பகிர்ந்துகொள்கின்றோம்.
“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ’’
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
பிரெஞ்சுக்கிளை
Home
சிறப்பு செய்திகள் நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களுக்கு எமது வீர வணக்கம்! – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...