ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த இந்திய தமிழ் மீனவர்களை மீட்க சமுத்திர சேது திட்டத்தை நடைமுறைபடுத்தி “ஐ.என்.எஸ் ஜலஸ்வா” என்கிற கடற்படை கப்பல் மூலம் மீட்டுவர இந்திய ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை மிகுந்த பாராட்டுக்குரியது. அந்த வேளையில் குமரி மாவட்டத்தை சார்ந்த 562 மீனவர்கள் உட்பட தமிழ் நாட்டை சேர்ந்த 720 மீனவர்களில் இடப் பற்றாக்குறை என்கிற காரணத்தைக் காட்டி 44 தமிழக மீனவர்களை மட்டும் ஈரானிலேயே விட்டுவிட்டு மீதமுள்ளவர்களை அழைத்துக்கொண்டு வந்தார்கள். ஆனால் பனிரெண்டு நாட்கள் கடந்து விட்ட நிலையில் அந்த 44 பேரையும் , தங்க இடமில்லாமலும் உண்ண உணவில்லாமலும் இன்னும் ஈரானிலேயே தவிக்கவிட்டிருப்பது மட்டுமல்லாமல் அவர்களை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்காமலிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சர்வதேச போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு மாதங்களுக்குப் பிறகுதான், அரசு ஈரானில் தவிக்கும் இந்திய தமிழ் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது. அதற்கான பயணத்தொகை பத்தாயிரம் உட்பட ஈரானில் இருந்து வெளியேறுவதற்கான வெளியேற்ற முத்திரையையும் பெற்று விட்ட பிறகு , இறுதி நேரத்தில் கப்பலில் இடமில்லை என்று நாற்பத்து நான்கு தமிழக மீனவர்களை மட்டும் அங்கேயே தவிக்க விட்டுவிட்டு கப்பல் புறப்பட்டதை ஈரமுள்ள எந்த நெஞ்சமும் ஏற்காது.
மனித நேயத்தை சாகடித்து அதன்மேல் மல்யுத்தம் நடத்துவதைப்போல்தான் உள்ளது இந்திய ஒன்றிய அரசின் இந்த இழிச் செயல். ஏற்கனவே அடிப்படை வசதிகள் ஏதுமின்றி நான்கு மாதங்கள் தவித்தவர்களுக்கு இந்தியா இப்படியொரு பெருத்த ஏமாற்றத்தையும் வலியையும் தருமென அவர்கள் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். இப்போது ஒப்புகை சீட்டு பெற்றுவிட்டதால் ஈரான் நாட்டின் எல்லா உதவிகளும் மறுக்கப்பட்டுள்ளது. மேற்படி இந்திய தூதரக மும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பயணத் தொகையை கட்டிவிட்டு பயணிக்குமாறு எத்தனித்து இருப்பதை அறமற்ற செயலாகவே பார்க்கிறேன்.
தன் நாட்டு மக்களை காக்க வேண்டிய அரசு கூலி வேலைக்கு பிழைப்புக்காக சென்றவர்களிடம் பெருந்தொகையை கட்டணமாக கேட்பது மனிதநேயத்திற்கும் மக்களாட்சிக்கும் எதிரானது. இந்நிலையில், இந்த அரசு யாருக்கானது என்கிற கேள்வியைத்தான் நான் முன் வைக்க விரும்புகிறேன். பெரும் தொழிலதிபர்களையும், பெருநிறுவன முதலாளிகளையும் விமானம் மூலம் மீட்ட இந்திய ஒன்றிய அரசு ஏன் தன் ஆதிக்கத்தை ஒன்றுமில்லாதவர்கள் மீது ஏவுகிறது? தமிழனுக்கு பாதிப்பு என்றால் எவர் கேட்கப் போகிறார் என்ற அலட்சியத்துடன் மாற்றாந்தாய் போக்கில் நடக்கிறதா? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாநில அரசும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது ஏன்? இதற்காக பின் வரும் காலங்களில் எங்களின் மீனவ மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். கொரோனா பாதிப்பால் உலகநாடுகள் தன் நாட்டு மக்களை வரவேற்று வாழ்வளிப்பதில் அசுர வேகத்தில் தாயுள்ளத்தோடு இயங்குகின்றன. ஆனால் தரணியாண்ட தமிழர்கள் மட்டும்தான் மாற்றாந்தாயிடம் சிக்கிய மழலையைப் போல அல்லல் படுகிறார்கள். எனவே தனியார் தொழில் நிறுவனத்தைப்போல் நடந்து கொண்ட மத்திய அரசின் போக்குகிற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துக்கொள்வதோடு, மத்திய மாநில அரசின் செலவில் உடனடியாக அவர்களை மீட்டுவர வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
07.07.2020