யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் 50 க்கும் அதிகமான இராணுவம் மற்றும் காவல்துறையால் சற்று முன்னர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
யாழ். காவல் நிலையப் பொறுப்பதிகாரியும் இதன்போது நேரில் வந்திருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ். கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தை இன்று நண்பகல் அளவில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் சுற்றிவளைத்து, அலுவலகத்துக்குள் பிரவேசித்த போது, முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் முக்கியமான குற்றச்சாட்டு ஒன்றை காவல் நிலையப் பொறுப்பதிகாரி முன்வைத்திருக்கின்றார்.
“கரும் புலிகள் தினத்தை நினைவு கூர்வதற்கு நீங்கள் திட்டமிட்டுள்ளதாக நம்பகரமான தகவல் கிடைத்துள்ளது. அதனால்தான் நாம் உங்களுடைய அலுவலகத்துக்குள் வந்துள்ளோம்” என யாழ். காவல் நிலையப் பொறுப்பதிகாரி கஜேந்திரகுமாரிடம் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், “உங்களுக்குக் கிடைத்தது தவறான தகவலாக இருக்கலாம். அல்லது எமது கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்துவதற்காகவும், பொது மக்களை எமது அமைப்பிலிருந்து ஒதுங்கி நிற்கச் செய்வதற்காகவும் இதனை வேண்டுமென்றே நீங்கள் செய்யலாம்” என கடும் தொனியில் கூறியிருக்கின்றார்.
இதற்குப் பதிலளித்த காவல் நிலையப் பொறுப்பதிகாரி, தாங்கள் மேலிடத்து உத்தரவை மட்டுமே நடைமுறைப்படுத்தியதாகத் தெரிவித்திருக்கின்றார்.