வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை மக்கள் தமது காணியை மீட்டுத்தருமாறு கோரி வனவள திணைக்களத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1980, 1990 காலப் பகுதியில் இப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியா உட்பட வேறுபகுதிகளிற்கு சென்ற மக்கள் மீண்டும் வந்து காடுகளாகக் கிடக்கும் தமது காணிகளைத் துப்புரவு செய்து கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
எனினும் இக் காணிகள் தமக்குரியது என்று வனவளத் திணைக்களத்தால் நீண்டகாலமாக கூறப்படுவதுடன் மக்கள் மீள், குடியேறுவதிலும், வீடுகளை அமைப்பதற்கும் வனவள திணைக்களம் தடையை ஏற்படுத்தி வருகின்றது. காணிகளை துப்புரவாக்கினாலோ அல்லது கட்டுமான பணிகளை மேற்கொண்டாலோ கைது செய்வோம் எனவும் மக்களை எச்சரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிற்கும், வனத்துறையினருக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டுவருகிறது.
வனவள திணைக்களத்தினால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்ற மக்கள் தமக்கான தீர்வினைக் கோரிப் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.