காவல்துறை தாக்குதலால் தந்தை மகன் உயிரிழப்பு.
காவல் நிலையமா? கொலை களமா?
வ.கௌதமன் கடும் கண்டனம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சார்ந்த பென்னிகஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் இருவரையும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே கொடூரமாய் கொலை செய்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. காட்டுமிராண்டித்தனமான இத்தாக்குதலுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
நடந்ததை ஆய்வு செய்யும்போது காவல்துறையினர் சட்ட விதிகளின்படி ஒரு சதவிகிதம் கூட நடந்து கொள்ளவில்லை என்பது நூறு சதவிகிதம் புலனாகிறது. சாத்தான் குளத்தில் செல்போன் கடையை அடைக்க கோரி கடை உரிமையாளரான பென்னிகஸூக்கும் காவல்துறைக்கும் தகறாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர்கள் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களை நேரில் பார்க்காமலே சிறையிலடைப்பதற்கு நீதிபதி ஒப்புதல் அளித்ததுதான் விந்தையிலும் விந்தை. அதையும் தாண்டி சாத்தான் குளத்தில் கைது செய்து தூத்துக்குடி கிளை சிறையையும், பாளையங்கோட்டை மத்திய சிறையையும் விட்டுவிட்டு எதற்காக தொடர்பே இல்லாத கோவில்பட்டி கிளை சிறையில் அவர்களை அடைக்க வேண்டும்?
முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படும் முன்பே சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் மிருகத்தனமாக தாக்கியும், பூட்ஸ் கால்களால் உதைத்தும் கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பென்னிகஸை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லாமல் சிறைபடுத்தியுள்ளனர். காவல்துறையின் இந்த எல்லை மீறலை தட்டி கேட்ட பென்னிகஸின் தந்தையான ஜெயராசூம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். காவல்துறையினர் அவருடைய ஆசன வாயில் ரத்தம் வரும்வரை தாக்கியது குரூரத்தின் உச்சம்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கூட வீடியோ ஆதாரம் வெளிவந்து அந்த பெண் பிள்ளைகளின் கதறல் மனம் உள்ள அனைவரையும் நிலைகுலைய செய்து விட்டது. ஆனால் நீதித்துறையோ போதிய ஆதாரமில்லை என குற்றவாளிகளை விடுதலை செய்தது. இங்கு நேர்மையான காவலர்களும் நீதியை நிலைநாட்டும் நீதியரசர்களும் இங்கு இல்லாமல் இல்லை. நாங்கள் அப்படிப்பட்டவர்களுக்கு தலை வணங்குகிறோம். ஆனால் பல நேரங்களில் காரில் வருபவனுக்கு ஒரு நீதியும் கால்நடையாய் வருபவனுக்கு ஒரு நீதியும் வழங்கப்படுவதை இன்னும் எவ்வளவு காலத்துக்கு சகித்துக் கொண்டிருப்பது?.
காவல்துறையினர் எப்பொழுது என்ன என்ன குற்றம் செய்தாலும் அவர்களை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றுகிறார்களே, ஏன் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை?. உயிரை பறி கொடுத்தவன் ஒப்பாரி வைத்துக் கொண்டேயிருப்பான். அதற்கு காரணமானவன் வேறொரு துறையில் அதே உடையில் சம்பளத்தோடு பணியாற்றிக் கொண்டிருப்பான். இது என்ன சட்டம், நீதி ஜனநாயகம்?.
சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு சர்வாதிகாரத்தோடு அலையும் அதிகாரிகளுக்கு இதன் பிறகாவது அரசு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சம்பவத்தன்று சாத்தான் குளம் காவல்நிலையத்தில் இருந்த அத்தனை காவல்துறையினர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். கொலைகளுக்கு நேரிடையாக காரணமான காவலர்களை கொலை வழக்கில் கைது செய்வதேடு மட்டுமல்லாமல் உடனடியாக சிறையிலடைத்து அதன் பின்னர் பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதியரசரை கொண்டு முறையாக விசாரித்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். மற்றும் பென்னிகஸ், அவரது தந்தை ஜெயராஜ் இருவரையும் இழந்து வாடும் குடும்பத்திற்கு இரண்டு கோடி நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையையும் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
24.06.2020