முல்லைத்தீவில் தொடரும் சிங்கள ஆக்கிரமிப்பு: ரவிகரன் கண்டனம்!

0
219

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் தமிழர் கிராமங்களை அண்மித்து சிங்கள குடியேற்றங்கள் நகர்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக தமிழர்களின் பூர்வீக தோட்டச்செய்கை நிலமான, தொட்டகண்டல் குளம் பகுதியில் உள்ள 825 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு, சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

தற்போது குறித்த காணிகளில் பாரிய பங்களா ஒன்று சிங்கள மக்களால் நிறுவப்பட்டுள்ளதுடன், பாரிய அளவில் தோட்டச் செய்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனத் தெரிவித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதற்கு கடும் கண்டனத்தினையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில், கோட்டைக்கேணி தொடக்கம் அம்பட்டன் வாய்க்கால், தொட்டகண்டல் குளம் ஆகிய பகுதிகளில் ஒரு பகுதியாக வனஜீவராசிகள் திணைக்களமும், மறுபகுதியில் வனவளத் திணைக்களமும் காணிகளை அபகரித்துள்ளது.

இந்நிலையில் நிமால் சிறீபாலடிசில்வா அமைச்சராக இருந்த காலத்தில் தொட்டகண்டல் குளம் பகுதியிலுள்ள 825 ஏக்கர் காணிகள், 33 சிங்கள பயனாளிகளுக்கு, ஒருவருக்கு தலா 25ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

நான் வடமாகாணசபை உறுப்பினராக இருக்கும்போது, இவ்விடயத்தினை மாகாணசபையிலும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

நிமால் சிறீபாலடிசில்வாவின் நெருங்கிய சகாக்களுக்கு இவ்வாறு காணி பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாக சிங்களப் பத்திரிக்கை ஒன்றும் செய்தி வெளியிட்டிந்தது.

அதேவேளை இவ்வாறு சிங்களப் பயனாளிகளுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட குறித்த தொட்டகண்டல் குளம் என்னும் இடத்தில் தற்போது பாரிய பங்களா ஒன்று கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றது. அத்தோடு காணியைச் சுற்றிலும் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டு, அக்காணிகளுக்குள் பாரிய அளவில் தென்னைகள், மற்றும் வாழை, மா உள்ளடங்கலாக அவர்கள் தோட்டச் செய்கையில் ஈடுபடுவதனை தற்போது காணக்கூடியதாக இருக்கின்றது.

ஏற்கனவே, எமது 80 தமிழ் பயனாளிகளிகளுக்கு குறித்த 825 ஏக்கர் காணிளும் வழங்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 1956ஆம் ஆண்டு தொடக்கம், எங்களுடைய தமிழ் மக்கள் குறித்த காணிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் பிற்பாடு 1984ஆம் ஆண்டு அப்பகுதியிலிருந்து எமது தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டு இக்காணிகள் யாவற்றினையும் அபகரித்துள்ளனர்.

தற்போது அக் காணிகள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் அவர்களால் அங்கு பாரிய அளவில் தோட்டச் செய்கை இடம்பெறுகின்றது. நிச்சயமாக எமது தமிழ் மக்களின் கணிகளை இவ்வாறாக அபகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் எங்களுடைய தமிழ் மக்கள் எதைக்கொண்டு, தமது வாழ்வாதாரத்தினை நடாத்துவது என்ற கேள்வி இங்கே எழுகின்றது. கொக்குத் தொடுவாய் தமிழ் மக்களுடைய வயல் நிலங்கள் வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களங்களால் அபகரிக்கப்படுகின்றன.

இவ்வாறாக சிங்கள குடியேற்றங்களை கொக்குத்தொடுவாய் தமிழ்க் குடியிருப்புக்களை அண்டிய பகுதிவரையில் நகர்த்திக்கொண்டு வந்துவிட்டனர்.

இத்தகைய ஆக்கிரமிப்புச் செயற்பாட்டுக்கு எனது கடுமையான கண்டனத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here