ஜேர்மனியின் தென்மேற்குப் பகுதி நகரமான ஸ்ரூட்கார்ட்டில்(Stuttgart) சனிக்கிழமை இரவு நடந்த வன்செயல்களில் பெருமளவு சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன.
நகரின் மையப்பகுதியில் போதைப் பொருள் விநியோகிப்பவர்கள் எனச் சந்தேகிக்கப்படு வோரைப் பொலீஸார் சோதனையிட முயன்றபோது உருவான முறுகல் பெரும் வன்முறையாக மாறியது என்று கூறப்படுகிறது.
தலையை மூடியவாறு காணப்பட்ட இளைஞர் கும்பல்கள் அங்கு திரண்டு வந்து பொலீஸாருடன் மோதினர். கடைகளையும் வாகனங்களையும் அடித்து நொறுக்கி சேதங்களை ஏற்படுத்தினர். வர்த்தக மையங்கள் உடைக்கப்பட்டு பொருள்கள் சூறையாடப்பட்டன.
கடைகள் கொள்ளையிடப்படுவதும் பொலிஸ் வாகனங்கள் கற்கள், போத்தல்களால் தாக்கப்படுவதும் காணொலிகளாக சமூகவலைத்தளங்களில் வெளியாகிப் பதற்றத்தை ஏற்படுத்தின.
போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 17 வயது இளைஞர் ஒருவரை பொலீஸார் தடுத்து சோதனையிட்டதை அடுத்தே அப்பகுதியில் கலவரங்கள் மூண்டன என்று பொலீஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.வன்முறையைத் தடுக்க முயன்ற பொலீஸார் பலர் காயமடைந் துள்ளனர்.
சனி இரவு முழுவதும் கலவரங்கள் கட்டு மீறியதை அடுத்து நூற்றுக்கணக்கான பொலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். 12 வெளிநாட்டவர்கள் உட்பட 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரூர்காட் நகரில் அண்மைக்காலத்தில் நடந்த மோசமான வன்முறை இது என்று நகரவாசிகள் தெரிவித்திருக்கின்றனர்.
(21-06-2020 குமாரதாஸன்)