மேஜர் முரளி மற்றும் வீர வேங்கை தம்பி ஆகியோரின் தாயார் சாவடைந்தார்!

0
828

விடுதலைப்புலிகளின் முன்னாள் மாணவர் அமைப்பு பொறுப்பாளர் மேஜர் முரளி மற்றும் வீர வேங்கை தம்பி ஆகியோரின் தாயார் தாயகத்தில் காலமாகிவிட்டார்.

தாயக விடுதலைக்காக இரண்டு மாவீரர்களை உவந்தளித்த இந்த வீரத் தாய்க்கு எங்களின் வீர அஞ்சலிகள்.

வீரத்தாய்க்கு
நினைவுக் காணிக்கை…
×××××××××××××××××××××××

தாயக விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பக்கத்தில் பேசப்படுகின்ற குடும்பங்களுள் ஒன்றாகி நின்ற இக் குடும்பத்தின் இல்லத்தரசி இன்று இவ்வுலக வாழ்வை துறந்தார்……

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாணவர் அமைப்பு பொறுப்பாளராகவும்,கோப்பாய் பிரதேசப் பொறுப்பாளராகவும் இருந்த
மேஜர் முரளி அவர்களும், வீரவேங்கை தம்பி அவர்களும் இறுதிவரை பற்றுறுதியோடு பயணித்து வீரகாவியமானவர்கள். இவ் வீரப் புதல்வர்கள் இருவரையும் இன விடுதலைக்காக வித்திட்ட வீரத்தாய் இன்று விழிமூடிக் கொண்டது.

மேஜர்-முரளி (வேலுப்பிள்ளை ரட்ணசிங்கம்) அவர்கள் 23.12.1987 அன்று யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் இந்திய படையினரின் சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இம் மாவீரனின் நினைவுத் தூபி
உரும்பிராய் – கோப்பாய் வீதியில் அமைந்திருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.


அவரது சகோதரனான வீரவேங்கை தம்பி (வேலுப்பிள்ளை ராஜகோபால்) அவர்களும் 14.04.1985 அன்று தமிழகம் செல்கையில் தமிழீழக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகி மாவீரர் ஆனார்….

இவ் வீரத்தாயோடு பழகிய நாட்கள் நினைவுகளாய் நீள்கிறது…..
மேஜர்-முரளி அண்ணர் அவர்களுடைய நினைவு நாட்களில் வணக்க நிகழ்வுக்கு அம்மாவை அழைத்து வருவதற்காய் பல தடவைகள் சென்று வந்திருக்கிறேன். வீட்டிற்கு போகின்ற போதெல்லாம் அன்பான வரவேற்பும், உரிமையுடனான உபசரிப்பும் எப்போதும் அம்மாவிடம் தனித்துவமானது.

இவர்கள் குடியிருந்த வீட்டிற்கு முன்பாக இடிந்த நிலையில் இவர்களின் கல்வீடொன்று உள்ளது
அந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் போராளிகளை சுற்றிவளைக்க வந்த இலங்கை இராணுவம் முரளி அண்ணரின் வீட்டை முற்றாக சேதப்படுத்தியமைக்கான தடயம் அது…..

ஆரம்பகால உறுப்பினர்கள்,விடுதலைப் போராட்டத்தின் தூண்கள் ஆரம்ப காலங்களில் அந்த இல்லத்தில் பாதம் பதிக்க, அச்சமின்றி ஓய்வெடுக்க அடைக்கலம் கொடுத்த அன்னை இல்லமென பின்னாளில் நான் அறிந்திருக்கிறேன்……

கால ஓட்டத்தின் நெருக்கடியில் திக்குத் திசை மாறி வாழ்ந்தாலும் நினைவுகள் வருகின்ற பொழுதெல்லாம் அன்னையின் சுகநலம் அறிய ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் உரிய முறையில் தொடர்பு எட்டாமல் போனது.

இன்று காலை முகப்புத்தகத்தை பார்த்த பொழுது
திரு கிருபா – தரன் அவர்களின் பதிவில் 20.06.2020 இன்று அந்த வீரத்தாய் நிரந்தர விழிமூடிய செய்தி என்னை வருத்தி நின்றது.

எம் வாழ்வியல் பயணத்தில் கண்டுவந்த பசுமையான நினைவுகளில் இவ் வீரத்தாயின் வெண்மையான அந்த மெல்லிய உருவம் என்றும் மாறாத புன்னகை பசுமரத்தாணியாய் என் நினைவில் நீளும்.

வீரத்தாயே….
உன் விருந்தோம்பலில் எத்தனையோ பேர் பசியாறி இருப்பார்கள். இன்னும் எத்தனையோ பேர்
உன் கையால் தாகம் தீர்த்திருப்பார்கள். அத்தனை பேரும் உன்னருகில் நினைத்தாலும் வரமுடியாத தூரத்தில்…..

நினைவுகளை நெஞ்சின் ஆழத்தில் புதைத்து, அத்தனை பேரின் சார்பாகவும் வரிகளால்
உங்கள் பாதம் பணிந்து நிற்கிறேன்.

தாயே..
நீங்கள் ஆற்றிய பங்கும் பணிகளும் என்றும் நீங்காது நிலைத்திருக்கும்….

உங்கள் ஆத்மா சாந்தியடைய சிரம் தாழ்த்தி நினைவுகளால் அகம் நிறைத்துக் கொள்கிறோம்…..

            -நன்றி-

து. திலக்(கிரி),
20.06.2020,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here