பிரான்சில் “கொக்கரக்கோ” ஒலியால் உலகப் புகழ் பெற்ற சேவல் உயிரிழந்தது!

0
232

பிரான்ஸில் கொக்கரக்கோ சத்தத்துக்காக பெரும் சட்டச் சிக்கலில் மாட்டி உலகப் புகழ் பெற்ற சேவல் உயிரிழந்து விட்டது என்ற தகவலை அதன் உரிமையாளர் அறிவித்திருக்கிறார்.

மொறிஸ் (Maurice) என்று அழைக்கப்பட்ட ஆறு வயதான இந்தச் சேவல் கொரோனா முடக்க காலத்தில் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்தது என்ற செய்தியை தாமதமாக இப்போது வெளியிட்டிருக்கிறார் அதன் உரிமையாளர் Corinne Fesseau.

நாட்டின் மேற்குக்கரை பிராந்தியமான Charente-Maritime பகுதியோடு இணைந்த d’Olérond’ தீவில் உள்ள கிராமத்து வீட்டில் உரிமையாளருடன் வாழ்ந்த மொறிஸ், விடி காலை வேளைகளில் வழமையாக எழுப்பும் கொக்கரக்கோ சத்தத்தைச் சகிக்காத அயலவர் ஒருவர் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். மொறிஸ் உரத்துக் கூவி ஒலி எழுப்பித் தொந்தரவு செய்வதாகக் கூறி அவர் வழக்குத் தொடர்ந்தார்.

கடந்த ஆண்டில் பெரும் சட்டச் சிக்கலாக மாறிய இந்தக் கொக்கரக்கோ விவகாரத்தில் முழு நாடும் மட்டுமன்றி உலக ஊடகங்களும் மொறிஸ் சேவலின் பின்னால் நின்று அதனை ஒரு கிராமப்புற ஹீரோவாக மாற்றி இருந்தன.

பிரான்ஸின் நகரங்களில் அடுத்தவருக்கு இடைஞ்சலாக சத்தங்கள் போடுவதைத் தடுக்க பல சட்டங்கள் உள்ளன. ஆனால் நகரங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு
வருவோர் இத்தகைய சட்டங்களை கிராமங்களிலும் எதிர்பார்த்து அயலவர்களுடன் முரண்படுகின்றனர்.

கிராமப்புற வாழ்வின் ஒர் அடையாளமாக வர்ணிக்கப்பட்ட மொறிஸ், பூர்வீக வாசிகளுக்கும் புதியவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளின் மையத்தில் விவாதப் பொருளாக மாறி ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்தது.

அயலவருக்கு இடைஞ்சலாக சத்தம் எழுப்புதல் தொடர்பான சட்டங்களின் கீழ் நடைபெற்ற நீண்ட வழக்கில் கடைசியில் மொறிஸ் வென்றது. அது வழமை போன்று தொடர்ந்து சத்தம் எழுப்பிக் கூவுவதற்கு அனுமதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மொறிஸுக்கு ஆதரவான தீர்ப்பின் தொடர்ச்சியாக கிராமப் புறங்களின் வாசனைகள் மற்றும் ஒலிகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள் இயற்கையின் ஒலிகளைப் பேணும் Patrimoine sensorial என்ற புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் நிறைவேற்ற வழிவகுத்தது.

(படம் :மொறிஸ் சேவலுடன் அதன் உரிமையாளர் Corinne Fesseau.)

18-06-2020 குமாரதாஸன் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here