பிரான்சில் ‘டொலிபிறான்ட்’ போன்ற பரசிற்றமோல் (Paracetamol) வகை மருந்துப் பொருள்கள் அனைத்தினதும் தயாரிப்பு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாக நாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
பிரான்ஸின் சுகாதார அமைச்சும் பொருளாதார அமைச்சும் கூட்டாக இத்தகவலை வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் காலத்துப் பட்டறிவு இத்தகைய தன்னிறைவான சுயசார்பு மருந்துத் தயாரிப்பின் அவசியத்தை அரசு மட்டத்தில் உணர்த்தியிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர் Sanofi மருந்து மற்றும் மருத்துவ ஆய்வு நிலையம் ஒன்றுக்கு விஜயம் செய்த அரசுத் தலைவர் மக்ரோன், நாட்டு மக்களுக்கு அவசியமான மருந்து உற்பத்திகளையும் அவை தொடர்பான ஆய்வுகளையும் உள்நாட்டிலேயே முன்னெடுப்பதற்காக 200 மில்லியன் ஈரோக்கள் மேலதிகமாக ஒதுக்கப்படுவதாக அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே பரசிற்றமோல் மருந்து தயாரிப்பு தொடர்பான இத்தகவல் வெளியாகி உள்ளது.
பிரான்ஸைப் பொறுத்தவரை நாட்டுக்கு தேவையான மருந்துப் பொருள்களில் பெரும்பாலான அனைத்துமே நாட்டுக்கு வெளியே உள்ள தொழிற்சாலைகளிலேயே தயாரிக்கப்படுகின்றன.
கடந்த மார்ச்சில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சமயம் நாடுகளின் எல்லைகள் இழுத்து மூடப்பட்டதால் பரசிற்றமோல் போன்ற சாதாரண காய்ச்சல் மற்றும் வலி நிவாரண மாத்திரைகளுக்குக் கூடப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது.
மருந்தகங்கள் மக்களின் தேவைக்கு ஏற்ப அவற்றை விநியோகிக்க முடியாமல் தடுமாறவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த அனுபவம் உள்நாட்டு மருந்து உற்பத்தியின் அவசியத்தை உறைப்பாக உணர்த்தி யிருந்தது.
18-06-2020 – குமாரதாஸன்