“மும்பை தமிழ் மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்!.”
தமிழக அரசுக்கு
வ.கௌதமன் வேண்டுகோள்!.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தமிழகத்தில் இரண்டொருமுறை தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. தேர்வு என்பது மாணவர்களின் உணர்வியல் சார்ந்தது. அது அவர்களின் எதிர்கால வாழ்வையும் கடந்து நிகழ்கால வாழ்வியலை நேரடியாக பாதிக்கக்கூடியது. பேரிரைச்சலின் மத்தியில் தியானம் இருப்பது எப்படி சாத்தியமாகாதோ, அப்படியேதான் பெரும் மனஉளைச்சலின் போதும், தேர்வு எழுதுவதும் சாத்தியமாகாது. இதனை மனதில் கொண்டே நீதிமன்றம் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் ஆளுமைகளின் கோரிக்கைகளையும் ஏற்று தமிழக அரசும் தேர்வை ரத்து செய்தது மரியாதைகுரியது மற்றும் போற்றுதலுக்குரியது.
உலகம் முழுவதும் தமிழ் வாழ்வதற்கு காரணம் இப் பூமிப்பந்து முழுவதும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், ஆஸ்ரேலியாவிலும், கனடாவிலும் தங்க ரதத்தில் வலம் வரும் தமிழ் மொழி தமிழகத்தில் மட்டும்தான் தகரத்தில் வைத்து புறம் தள்ளப்படுகிறது. பல அரசு பள்ளிகளிலும் கூட இன்று தமிழ் வழி வகுப்புகள் இல்லை. தமிழகத்தில் பிறமொழி திணிப்பானது ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், இந்தி மோகமென முன்னேற தமிழ் தனக்கான இடத்தில் இருந்து வலுவிழந்து கொண்டே வருகிறது. ஆனால் மகாராட்டிர மாநிலம் மும்பை தாராவியில் சில தமிழ்ப் பள்ளிகள் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தி வருகின்றன. பிரிதொரு மாநிலம் என்பதால் தமிழக அரசுத் தேர்வு இயக்ககம் இவர்களை தனித்தேர்வர்களாக கணக்கில் கொண்டு தேர்வு நடத்தி வருகின்றது. தமிழகத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனித்தேர்வர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களின் மனநிலை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடாதென தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். மும்பை தாராவியில் ஏற்பட்டிருக்கும் கொரோனாவின் பாதிப்பு நாட்டையே நடுநடுங்கச்செய்து கொண்டிருப்பது ஆட்சியாளர்கள் அறியாதவையல்ல. மராட்டிய அரசு தாராவியை சிவப்பு பகுதியாக அறிவித்து கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. தமிழகத்தை விட கொரோனாவின் கோரப்பிடியில் கடுமையாக சிக்கியுள்ளது மராட்டிய மாநிலம். தற்போது தேர்வு பற்றிய தமிழக அரசின் அறிவிப்பு குறித்து மும்பை தாராவி பகுதித் தமிழ் மாணவர்களின் மனநிலை பெரும் அவதிக்குள்ளாகியுள்ள சூழலில், தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து மற்றும் அனைவரும் தேர்ச்சி என்கிற அரசாணை தனித்தேர்வர்களுக்கும் பொருந்துமென அறிவித்து அங்கு வாழும் தமிழ்ப் பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் பெரும் எதிர்பார்ப்பை நிறைவேற்றிட வேண்டுமென தமிழக அரசை, தமிழ்ப் பேரரசு கட்சி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.
வ.கௌதமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி.
“சோழன் குடில்”
19.06.2020