சீனாவில் இரண்டாம் கட்ட அலையாக கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், 21 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெய்ஜிங் நகரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுபடுத்தும் நோக்கில் பாடசாலைகள் அனைத்தும் பெய்ஜிங்கில் மூடப்படுவதாக கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு இணையம் வழி கல்வியைத் தொடருமாறு பாடசாலைகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் மாணவர்களின் வருகையை தடை செய்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சந்தை மூடப்பட்டது.
கடந்த மாதம் 30 ஆம் திகதியிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்தச் சந்தைக்குச் சென்று வந்துள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பெய்ஜிங்கில் இதுவரை 106 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறும் சீன அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் மீண்டும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.