முல்லைத்தீவில் அபரிக்கப்படும் காணிகள்: மக்கள் போராட்டம்!

0
499

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத் திணைக்களம் ஈடுபட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்கு உட்பட்ட தண்டுவான் பகுதியில் நில அளவைத் திணைக்களத்தின் நடவடிக்கை இன்று (17) காலை முன்னெடுக்கப்பட்ட போது மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ35 மற்றும் ஏ9 தர வீதிகளிகளிலும் இந்த முதன்மை வீதிகளில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதிகளில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட நில அளவைத் திணைக்களம் ஈடுபட்டுள்ளதால் மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதேச சபைகளிடம் அனுமதி எடுத்து கடைகள், வீடுகள், மதில்கள் மக்களால் கட்டப்பட்டுள்ள நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் எல்லைப்படுத்தி காணிகளை அபகரித்து வருகின்றார்கள்.

உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் படி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முதன்மை ஏ-தர வீதிகளின் அகலங்கள் 33 அடி என்பது வரையறையாகும். இந்நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் 66 அடியினை அளவீடாக கொண்டு எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

முதன்மை வீதியிலிருந்து பிரிந்து செல்லும் வீதிகள் 24 அடியாக பிரதேச சபையினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நில அளவைத் திணைக்களத்தினால் 33 அடியாக எல்லைப்படுத்தி தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு, கோம்பாவில், ஒதியமலை, மேழிவனம் ஆகிய கிராமங்கள் நில அளவைத்திணைக்களத்தினரால் மக்களின் காணிகளில் எல்லைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தண்டுவான் பகுதியில் நில அளவைத்திணைக்களத்தின் நடவடிக்கை முன்னெடுப்பிற்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி நில அளவை திணைக்களத்தின் எல்லைப்படுத்தல் நடவடிக்கையினை முன்னெடுக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

மக்கள் கூட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நில அளவைத்திணைக்கள அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஒட்டுசுட்டான் பொலிஸார் சென்றுள்ளார்கள்.

பொலிஸாரால் மக்களின் பிரச்சினையினை சுமூகமாக்க முயற்சித்த வேளை மக்களின் எதிர்பினை தொடர்ந்து இது குறித்து பிரதேச செயலாளரிடம் நாளை (18) எழுத்து மூலம் முறையிடவுள்ளதாகவும், இதன்போது நில அளவைத்திணைக்கள அதிகாரியும் வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here