பிரான்ஸின் Dijon நகரில் கலவரங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் ஆபத்தை எதிர்நோக் கியுள்ளனர்.
கடந்த நான்கு, ஐந்து தினங்களாக நீடித்த குழு வன்முறைகளில் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் எவராயினும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சுக்கு அதிபர் மாளிகை உத்தரவிட்டிருக்கிறது.
சட்டங்களை இயற்றுவது அரசு மட்டுமே. அதனை வேறுயாரும் கையில் எடுத்துவிட அனுமதிக்க முடியாது என்று கலவரப் பகுதிக்கு விஜயம் செய்த உள்துறை அமைச்சின் செயலாளர் காட்டமாகக் கருத்து வெளியிட்டார்.
ஆட்சியில் உள்ள சோஷலிச மேயரின் எதிர்ப்பை மீறி Dijon நகருக்குச் சென்ற மரீன் லூ பென்(Marine Le Pen) அம்மையார், ‘விரைவிலேயே நாங்கள் பாக்தாத் நகரில் வாழ்வது போன்ற அச்ச நிலைமை ஏற்படப்போகிறது’ என்று அங்கு வைத்து எச்சரித்தார்.
கடந்த வார இறுதியில் இருந்து செச்சினிய நாட்டவர்களுக்கும்(Chechen) ஐரோப்பிய அரபு சமூகத்தவர்களுக்கும் (Maghreb) இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக Dijon நகர தெருக்கள் பெரும் வன்முறைக்களமாக மாறியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே நடமாட முடியாத அச்ச நிலைமை தோன்றி இருந்தது.
16 வயதான செச்சினிய இளைஞர் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்வோர் எனக்கூறப்படுவோரால் தாக்கிப் படுகாயப்படுத்தப் பட்டதை அடுத்தே அங்கு வன்முறைகள் வெடித்தன. இந்ந சம்பவத்துக்குப் பழிவாங்கும் வெறியுடன் நாடு முழுவதும் இருந்து செச்சினிய இளைஞர்கள் Dijon நகருக்குப் படையெடுத்து வந்து கலவரங்களில் ஈடுபட்டனர்.பெல்ஜியம் போன்ற அயல் நாடுகளைச் சேர்ந்த செச்சினியர்களும் பிரான்ஸுக்கு வந்து இந்த வன்செயல்களில் இணைந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.
தலையை மறைத்து மூடியவாறு பொல்லுகள், கம்பிகள், துடுப்பு மட்டைகள் மட்டுமன்றி துப்பாக்கிகளுடனும் தெருக்களில் இறங்கிய இளைஞர் குழுக்கள் பெரும் அட்டகாசங்களில் ஈடுபட்டன. கடைகள், வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் எரித்து அழிக்கப்பட்டன.
‘பிரான்ஸ் 3’ (France 3)தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளர் குழுவினரும் வன்முறையாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகினர். வன்செயல்கள் இரவு பகலாகத் தொடர்ந்ததை அடுத்து நூற்றுக்கணக்கான பொலீஸாரும் கலகம் அடக்கும் படையினரும் அங்கு அனுப்பப் பட்டனர்.
ஆரம்பத்தில் இந்த வன்முறைகளைத் கட்டுப்படுத்த நகர நிர்வாகமும் பொலிஸாரும் தவறிவிட்டனர் என்று குற்றச் சாட்டுகள் எழுந்தன.தாங்கள் பாதுகாப்பு ஏதும் இன்றி அரசினால் கைவிடப்பட்டதாக உணர்வதாக உள்ளூர்வாசிகள் கூறியிருந்தனர்
எதிர்க்கட்சிகள் அரசின் மெத்தனப்போக்கை கடுமையாக விமர்சித்துக் கருத்து வெளியிட்டன. இவ்வாறு அழுத்தங்கள் அதிகரித்ததை அடுத்து இந்த வன்முறைகளில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸூக்குப் பிந்திய நெருக்கடிகள், பொலீஸ் வன்முறைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் என்று கவனங்கள் திரும்பியிருக்கும் சூழலில் நாட்டின் ஒரு பகுதியில் வெளிநாட்டு சமூகத்தினர்கள் நடத்திய ‘குட்டிப் போர்’ இது என்று ஊடகங்கள் இதனை வர்ணித்திருந்தன.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான செச்சினியவில் 1990 களிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட போர்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான செச்சினியர்கள் மேற்கு ஜரோப்பா நோக்கிப் புலம் பெயர்ந்தனர். இவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் பிரான்ஸில் தஞ்சம் புகுந்து வாழ்கின்றனர்.
Burgundy மாகாணத்தின் தலைநகரான Dijon நகரம் உட்பட நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் செச்சினியர்களுக்கும் ஐரோப்பிய அரேபிய சமூகத்தவர்களுக்கும் மத்தியில் போதைப் பொருள் கடத்தல் விவகாரங் களுடன் தொடர்புடைய பகைமை நீண்ட காலமாக நிவுவதாகச் சொல்லப்படுகிறது.
17-06-2020 (குமாரதாஸன்)