வல்லை இராணுவ முகாம்முன் வெடிபொருளை வீசியதாக நீர்வேலி இளைஞர் கைது!

0
197

வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார் ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் (ரிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லைவெளி இராணுவ முகாமுக்கு முன்பாக நபர் ஒருவர் விழுத்திவிட்டு சென்ற மர்ம பொதியை இராணுவத்தினர் சோதித்த போது அது வெடித்ததில் படைச் சிப்பாய்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் பலாலி படைத்தள வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றனர்.

வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, முகாமினுள் தவறுதலான வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்து பொலிஸாரின் மேலதிக விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் வல்லை வீதி ஊடான போக்குவரத்தில் ஈடுபட்டோரின் விவரங்களை, சிசிடீவி கமரா பதிவுகளை வைத்து ஆராய்ந்த இராணுவத்தினர், இன்று (16) காலை நீர்வேலி, பூதர்மடத்தடியில் சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டு 25 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர். அவரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் முற்படுத்தினர்.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்புகளால் எந்தவொரு விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் சந்தேக நபரை இன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கோப்பாய் பொலிஸார் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here