அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளெய்டின் என்ற கறுப்பின இளைஞர் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மற்றுமொரு கறுப்பின இளைஞர் நேற்று முன் தினம் (12) பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அட்லாண்டா நகரில் உள்ள உணவகம் முன்பு ரைஷார்ட் புரூக்ஸ் (27-வயது) என்ற கறுப்பின இளைஞர் காரில் தூங்கி கொண்டிருந்தார். இதனால், வாடிக்கையாளர்களினால் சாப்பிட வர முடியவில்லை என உணவக ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் அங்கு சென்று, அந்த இளைஞர் மது அருந்தியுள்ளாரா என சோதனை செய்ய முயன்றனர். அதற்கு ஒத்துழைப்பு அளிக்க புரூக்ஸ் மறுத்துவிட்டார். மேலும், கைது செய்ய முற்படும் போது, பொலிஸாரிடம் இருந்து தற்காலிக காயத்தை ஏற்படுத்தும் துப்பாக்கியை (டேசர் – Taser) பறித்து கொண்டு ஓட முயன்றார்.
இதனையடுத்து, பொலிஸார் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் புரூக்ஸ் பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டித்து அட்லாண்டா நகர பொலிஸ் தலைவர் எரிக்கா ஷீல்ட்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த கொலையை கண்டித்து அட்லாண்டா நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.