பிரான்சின் Toulon கடற்படைத்தளத்தில் அணு நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கடற்படைத் தளம் மத்தியதரைக்கடல் துறைமுகமான Toulon இல் அமைந்துள்ளது. அங்கு பராமரிப்பு வேலைகளுக்காக தரித்து நிற்கும் பேர்ள்(Perle) என்னும் அணு நீர்மூழ்கி சண்டைக் கப்பலிலேயே இன்று காலைமுதல் தீபரவியது.
விசேட தீயணைப்பு பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் பல மணிநேர முயற்சிக்குப் பின்னர் அணுக் கதிரியக்க உபகரணங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தீயைக் கட்டுப்படுத்தி உள்ளனர்.
மார்செய்(Marseille) துறைமுகத்தில் இருந்து விசேடமாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புக் கப்பல் ஒன்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
கப்பலில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 40 பேர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அணுக்கதிரியக்க எரிபொருள் மற்றும் ஆயுத தளபாடங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயினால் வெளியேறிய வெண் புகை மண்டலத்தில் கதிரியக்கம்(radioactive) எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தீ விபத்துக்குள்ளான அணு நீர்மூழ்கியை பார்வையிட பாதுகாப்பு அமைச்சர் Florence parly உடனடியாக Toloun கடற்படைத்தளத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
12-06-2020 குமாரதாஸன்