அதிபர் மக்ரோன் பதவி விலகவுள்ளார் என்று வெளியான செய்திகளை எலிஸே மாளிகை மறுத்துள்ளது.
அண்மையில் லண்டனில் கூடிய கட்சியின் நிதி உதவியாளர்களுடன் நடத்திய வீடியோ கலந்துரையாடல் ஒன்றின்போது தனது பதவி விலகல் குறித்த தகவலை மக்ரோன் அவர்களிடம் தெரியப்படுத்தினார் என்று ‘Le Figaro’ பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.
எதிர்த்தரப்பில் பலமான வேட்பாளர்கள் எவரும் இல்லாத தற்போதைய சூழ்நிலையில் பதவியை விட்டு விலகி உடனடியாகத் தேர்தலை நடத்துவதன் மூலம் மீண்டும் தனது பலமான வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பான சந்தர்ப்பம் இது என மக்ரோன் கருதுகின்றார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது.
பிரான்ஸின் அரசியல் வட்டாரங்களை பரபரப்படைய வைத்த அந்த செய்தியை எலிஸே மாளிகை உடனடியாகவே மறுத்திருக்கிறது. இத் தகவலை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பிரான்ஸில் தேசியவாதக் கட்சியின் தலைவி மரின் லூ பென்னை(Marine Le Pen)தவிர ஏனைய இரண்டு பிரதான எதிர்க் கட்சிகளுக்கும் பலமான – கவர்ச்சிகரமான தலைவர்கள் என்று எவரும் கிடையாது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து நாடு வெற்றிகரமாக மீட்டெழுந்துள்ள நிலையில் தனது ஆட்சி அதிகாரத்தை மீள உறுதிசெய்து கொள்ளும் நோக்கில் திடீர்த் தேர்தலை நடத்த மக்ரோன் ஆயத்தமாகிறார் என்று செய்திகளில் கூறப்படுகிறது.
கடந்த மாதம் அவரது அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குழுக்களாகப் பிரிந்து சென்று தனித்து இயங்க முடிவு செய்ததை அடுத்து அதிபர் மக்ரோனின் La République En Marche கட்சி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை இழந்திருக்கிறது.
மக்ரோனின் ஓய்வூதிய மறுசீரமைப்பு உட்பட பல பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள் வைரஸ் நெருக்கடி காரணமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் நகரசபைத் தேர்தல்களில் பாரிஸ் உட்பட எந்தவொரு நகர சபை மேயர் பதவியையும் கைப்பற்றும் வாய்ப்பு அவரது கட்சிக்குக் கிடையாது என்று கணிப்புகள் காட்டுகின்றன.
தனது பதவிக்காலத்தின் இறுதி இரண்டு ஆண்டுகள் நெருங்குவதால் அமைச்சரவை மாற்றம் ஒன்றை அவர் அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போது பிரதமர் எத்துவா பிலிப்பின் பதவி பறிபோகக் கூடும் என்றும் நம்பப்படுகிறது.
இத்தகைய அரசியல் பின்னணியில் நாட்டு மக்களுக்கான தொலைக்காட்சி உரை ஒன்றை வரும் ஞாயிறு இரவு நிகழ்த்த இருக்கிறார் அதிபர்.கொரோனா வைரஸ் பொது முடக்கத்தில் இருந்து வெளியேறும் மூன்றாவது கட்ட ஏற்பாடுகள் தொடர்பான விவரங்களை இந்த உரையில் அவர் வெளியிடவுள்ளார்.
12-06-2020 – குமாரதாஸன்