தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து பயன்படுத்துப்படும் என தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவித்துள்ளது.
2018-2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு துறை அமைச்சர் அவர்களால் பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:-
“தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும், உதாரணமாக திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிகேன் எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையவும், இதுபோன்ற எண்ணற்ற ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் அமையும் வகையிலும் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும். இதற்கெனத் தொடராச் செலவினமாக ரூபாய் 5 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்”.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, “தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்தல்” என்ற அறிவிப்பாணையின் மூலம், சுமார் 1018 ஊர்ப்பெயர்களின் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.