“எட்டுவழிச்சாலை வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதா!? விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்!”
வ.கௌதமன் கடும் கண்டனம்.
கண்ணுக்குத் தெரியாத கொடூர கொரோனா கிருமியை எதிர்த்து உலகமே போரிட்டுக்கொண்டிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில் அதனை தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டிய அரசுகள் கொரோனாவுடன் வாழப் பழகி கொள்ளுங்கள் என அறிவித்துவிட்டு கொரோனாவைவிடக் கொடிய அழிவு திட்டங்களை தொடர்ந்து அரங்கேற்றிக்கொண்டிருப்பது இரக்கமற்ற வன்முறை.
தமிழகத்தில் உயிர்ப்பலியின் எண்ணிக்கையும், நோய் தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எட்டு வழிச் சாலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது நேர்மையற்ற செயல் ஆகும். விவசாயிகள் ஏற்கனவே கொரோனா பாதிப்பால் நலிவடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டிய அரசுகள், அதனை தவிர்த்துவிட்டு அவர்களை நிர்மூலமாக்க முயற்சிப்பது அறமற்ற செயல்.
எட்டு வழிச் சாலைக்கெதிராக மக்களின் போராட்டக்குரல் இன்னும் ஓயவில்லை. நிலம் தர மறுத்த விவசாயிகள் தொடர்ந்து மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இந்நிலையில் சட சடவென்று தமிழகத்தின் உயர்கல்வி உரிமைகளை பறித்து, விவசாயிகளின் இலவச மின்சாரத்தில் கைவைத்து, இப்போது விவசாய நிலங்களையும் அபகரித்து, விவசாயிகளை நடுதெருவில் நிறுத்தி எங்கள் மக்களின் கண்ணீரில் எட்டு வழி சாலையை அமைக்க முயற்சிப்பதென்பது எவ்வகையில் நியாயம்? இது மத்திய மாநில அரசுகள் இணைந்து நின்று எங்கள் விவசாயிகள் மீது தொடுக்கும் போர்.
உண்மையில் அந்த 8-வழிச்சாலை யாருக்காக பயன்படப் போகிறது? எங்கள் தமிழ் மண்ணின் வளங்களை கொள்ளை கொண்டு போக நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் தமிழ்நாட்டை அடக்கி நிரந்தரமாக அடிமைப்படுத்த இங்கு அமைக்கப்போகும் ராணுவ தளவாட தொழிற்சாலைகளுக்காகவும்தான் என்பது நாங்கள் அறியாதது அல்ல. சோறு கொடுப்பவள் தாய். அந்த தாய்க்கு அரிசி கொடுப்பவர்கள் விவசாயிகள். அரிசி கொடுக்கும் அந்த விவசாயிகளின் வாய்களுக்கு “வாய்க்கரிசி” போட நினைப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்?
மேலும் மத்திய அரசின் இத்திட்டத்திற்கு ஆதரவாக எட்டுவழிச்சாலைதான் வேண்டுமென, தான் சார்ந்த கட்சிக்காரர்களை தூண்டிவிட்டு அதை செய்தியாக்கி விவசாயிகள் எட்டுவழிச்சாலையை வரவேற்கிறார்கள் என்கிற மாய பிம்பத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் இத்திட்டத்தை செயல்படுத்திவிடலாம் என தமிழக அரசு நினைத்தபோது அதே விவசாயியைக் கொண்டு “நான் நிலம் தரவிரும்ப வில்லை என்னை அரசு அதிகாரிகள் ஏமாற்றி நிலம் தருகிறேன் என பேசச் சொன்னார்கள்” என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தார்கள் விவசாயிகள். சேலம் தேசிய நெடுஞ்சாலை இன்னொரு தூத்துக்குடியாக மாறினாலும் அரசின் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை உழவுத்தொழிலை உயிர்த்தொழிலாக செய்துவரும் தமிழக விவசாயிகளின் சார்பாக உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம். இது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய அநீதி. இந்த அநீதி போக்கை நீதிமன்றம் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். எப்படியாவது எட்டுவழிச்சாலை போட்டுவிடலாம் என எண்ணுகிற அரசுகளின் இந்த முடிவு ஆபத்தான பின் விளைவுகளை தோற்றுவிக்கும் என்பதை மீண்டும் எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதைவிடுத்து எட்டு வழிச்சாலை போட்டே தீருவேன் என்று இந்த அரசுகள் அடம்பிடித்தால் முன்பு விவசாயிகளோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதுபோல, மீண்டுமொருமுறை என் தலைமையில் தமிழ்ப் பேரரசு கட்சி விவசாயிகளைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுமென்றும் எச்சரிக்கிறேன்.
வ.கௌதமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
04.06.2020