முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, கொக்கிளாய் மீனவர் பகுதிகள் மீண்டும் அச்சமும் பதற்றமும் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. திடீரென அப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் மறைமுகமான ஆதரவுடன் தமிழர்களின் பாரம்பரியமான மீன்பிடிக் கிராமங்களை இவ்விதம் தென்னிலங்கை மீனவர்கள் ஆக்கிரமிப்பது தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. இதற்கு கடற்படையினரின் ஒத்துழைப்பும் இருந்திருக்கின்றது. ஆனால், இப்போது கொரோனா பரவல் அச்சத்தில் நாடு இருக்கும் போது ஆயிரக்கணக்கான மீனவர்கள் இவ்விதம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பது அப்பகுதியிலுள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
தென்பகுதி மீனவர்களின் இந்தத் திடீர் ஆக்கிரமிப்பு நாயாறு பகுதியில் உருவாக்கியிருக்கும் நெருக்கடி அப்பகுதி மக்களின் இருப்பையே பாதிக்கக்கூடியது. இவர்கள் சட்டவிரோதமான முறையில் அந்தப் பகுதியை ஆக்கிரமித்திருப்பதுடன் மட்டுமன்றி, தடைசெய்யப்பட்ட முறைகளைப் பயன்படுத்தியே மீன்பிடித் தொழிலிலும் ஈடுபடுகின்றார்கள். குறிப்பாக டைனமெற், சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சுதல் உள்ளிட்ட முறைகளை அவர்கள் பின்பற்றுவது அப்பகுதியில் மீன்வளத்தையே இல்லாதொழிக்கக்கூடிய ஆபத்தானது.
பாரம்பரியமாக நாயாறு பகுதியிலிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழ் மீனவர்களின் எதிர்காலத்தையே இது கேள்விக்குறியாக்கக்கூடியது. சட்டவிரோதமான இவர்களுடைய ஆக்கிரமிப்பை கண்டும் காணாதது போல கடற்படையினர் இருப்பது, இவர்களுக்குத் துணைபோகும் ஒரு செயற்பாடாகத்தான் பார்க்கப்படுகின்றது.
மீன்பிடித் தொழிலுக்கு வரக் கூடிய ஆபத்து ஒரு புறம் இருக்க, கொரோனா தொற்று அச்சத்தில் நாடு இருக்கும் நிலையில் இவ்வளவு பெருந்தொகையான மீனவர்கள் ஒரேயடியாக இடம்பெயர்ந்து வருவதிலுள்ள ஆபத்தை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. இவர்கள் யாருமே சுகதார முறைகளைப் பின்பற்றவில்லை. இந்த ஆக்கிரமிப்பு வருடாந்தம் இடம்பெறும் ஒன்றுதான். ஆனால், இம்முறை கொரோனா தொற்றுக்கு மத்தியில் இடம்பெற்றிருக்கின்றது.
தொடர்ச்சியான போரினாலும், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா முடக்கத்தினாலும் தொழில் ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில்தான் நாயாறு, கொக்கிளாய் மீனவர்கள் உள்ளனர். தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு இவர்களுடைய நிலையை மேலும் மோசமாக்குகின்றது. அவர்களுடைய வாழ்வாதாரமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்படுகின்றது.
இந்த நிலையிலிருந்து அவர்கள் மீட்பதற்கும், அவர்களுடைய வாழ்வாதாரம், பாதுகாப்பு என்பவற்றை உறுதிசெய்வதற்காகவும் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.