பாரிஸ் புறநகரில் 2016 ஆம் ஆண்டு பொலீஸ் காவலில் உயிரிழந்த கறுப்பின இளைஞனின் மரணத்துக்கு நீதி கேட்டும் அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் மீதான பொலீஸ் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பாரிஸ் நகரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
தடையை மீறி திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் நகரவிடாது தடுக்க முற்பட்டதில் ஆங்காங்கே சிறு மோதல் சம்பவங்களும் இடம்பெற்றன.
பாரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் Porte de Clichy இல் அமைந்துள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு (tribunal judiciaire) முன்பாகத் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அவனியூ து கிளிச்சி ( Avenue de clichy) வழியே முன்னேற முற்பட்டபோது கலவரம் அடக்கும் பொலீஸ் படையினர் வாகனங்கள் சகிதம் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் நேற்று இரவு வரை பெரும் முறுகல் நிலை நீடித்தது. ஆங்காங்கே வீதியில் சிறு தீவைப்புச்சம்பவங்களும் இடம்பெற்றன. பொதுச் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன. அமெரிக்காவில் பொலீஸாரால் கைது செய்யப்பட்டபோது கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த கறுப்பின ஆண் உயிரிழக்கும் தறுவாயில் எழுப்பிய “என்னால் மூச்சு விட முடியவில்லை” (I can’t breathe anymore”) என்ற மரண ஓலம் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பரவலாக ஒலித்தது. “I can’t breathe anymore”என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளையும் காண முடிந்தது.
‘Truth for Adama’ என்ற இளையோர் அமைப்பு ஒன்றின் பெயரில் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தற்போதைய சுகாதார நிலைமையைக் காரணம் காட்டி பொலீஸார் தடை விதித்திருந்தனர். எனினும் தடையை மீறி சுமார் 20 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் திரண்டனர் என்று பொலீஸார் மதிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி பாரிஸின் புறநகரான Beaumont-sur-Oise என்னும் இடத்தில் பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களது காவலில் இரு மணிநேரத்தின் பின்னர் உயிரிழந்த Adama Traoré என்ற கறுப்பின இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரும் இளைஞர் அமைப்பே நேற்றைய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
03-06-2020 (குமாரதாஸன்)