கும்மிடிப்பூண்டி ஈழ ஏதிலியர் முகாமில் வசித்துக்கொண்டிருக்கும் ஆயிரம் குடும்பங்களுக்கும் கொரோனா கால நிவாரணமாக மளிகை பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று 29.05.2020 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதுதொடர்பாக ஒதமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் அவர்கள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
எனது நெருங்கிய நண்பரும் “மகிழ்ச்சி” திரைப்பட தயாரிப்பாளருமான திரு. த.மணிவண்ணன் அவர்களின் தந்தை பெருந்தமிழர் அய்யா கு. தர்மலிங்கம் அவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நமது தொப்புள்கொடி சொந்தங்களான கும்மிடிப்பூண்டி ஈழ ஏதிலியர் முகாமில் வசித்துக்கொண்டிருக்கும் ஆயிரம் குடும்பங்களுக்கும் கொரோனா கால நிவாரணமாக மளிகை பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு 29.05.2020 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
அய்யா பழ. நெடுமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. தே.இரமேஷ் அவர்கள் நிவாரண பொருட்களை கொடுத்து தொடங்கி வைக்க நிகழ்வு நடந்தேறியது.
எழுநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடியதால் கொரோனா கால பாதுகாப்பிற்காக ஐம்பது குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணம் தந்துவிட்டு மற்ற அனைவருக்கும் அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.
இன அழிப்பு போரால் பாதிக்கப்பட்டு தமிழகத்திற்கு வந்த எங்கள் ஈழ சொந்தங்களுக்கு என்றும் நாங்கள் தோள் கொடுப்போம் துணை நிற்ப்போம் என்பதற்காகவே கும்மிடிப்பூண்டி முகாமில் நடக்கின்ற மூன்றாவது நிகழ்வாக இந்நிகழ்வு நடந்தது. ஏற்கனவே படிக்கும் பிள்ளைகளுக்காக ஒரு நிகழ்வும், கஜா புயலால் கடுமையாக பாதிப்புக்குள்ளானபோது ஒரு நிகழ்வும் நடத்தப்பட்டது. உலகில் தமிழினம் எங்கு பாதிக்கப்பட்டாலும் நாம் அனைவரும் ஒருத்தாய் மக்கள் என்கிற பெரும் எண்ணத்தோடு விழுந்து கிடப்பது எவராக இருந்தாலும் அவரை தூக்கி தாங்கி பிடிப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை மட்டுமல்ல தார்மீக உரிமை என்பதை ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழினம் தாய் மனதோடு உறுதியெடுக்க வேண்டுமென்று இந்நேரத்தில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
வ. கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி.