சென்னை புழல் சிறையில் 31 சிறையாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், புழல் சிறையிலிருந்து திருச்சி மற்றும் கடலூர் நடுவண் சிறைகளுக்கு மாற்றப்பட்டவர்கள் வழியாக அங்கும் கொரோனா பரவுவதாகவும் வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
இந்திய அரசின் இனப்பகைக் காரணமாக சட்ட நெறிகளுக்கு எதிரான வகையில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட்பயஸ், இரவிக்குமார், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்கள் விடுதலை செய்யப்படாமல் இன்னும் சிறையில் உள்ளனர்.
பெரிதும் நோய்வாய்ப்பட்டும் விடுதலை செய்யப்படாத நீண்டகால சிறைவாசிகளும் சிறைகளில் வாடுகிறார்கள்.
இந்நிலையில், சிறைகளில் கொரோனா தொற்று பரவத் தொடங்கினால் மிகப்பெரிய மனித உயிராபத்தை ஏற்படுத்தி விடும். இந்த மெய்நிலையைக் கருத்தில் கொண்டுதான், உச்ச நீதிமன்றம் சிறையாளிகளுக்கு தாராளமான வகையில் விடுப்பு அளிப்பது, சிறு குற்றங்களுக்குக் கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவிப்பது போன்றவற்றை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியது.
பரவி வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களுக்கும், பிற நீண்டகால சிறைவாசிகளுக்கும் நீண்டநாள் விடுப்பு (பரோல்) வழங்கி வெளியில் விடுமாறும், விசாரணை சிறையாளிகளுக்கு தாராளமான முறையில் பிணை வழங்கி விடுதலை செய்யுமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர், தோழர் கி. வெங்கட்ராமன், தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.