குரங்கின் கையில் கொரோனா!

0
503

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளர்களின் இரத்த மாதிரிகளை(blood samples) குரங்குகள் பறித்துச் சென்றுள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தலைநகர் லக்னோவில் இருந்து 460 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மீரட் (Meerut)நகரில் இயங்கும் அரசு மருத்துவக்கல்லூரியின் ஆய்வகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கு சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகள் சிலரது இரத்த மாதிரிகளை ஆய்வுக்கூட பணியாளர் ஒருவர் கையில் எடுத்துச் சென்றசமயம் காத்திருந்த குரங்குகள் கூட்டம் ஒன்று அவரைத் தாக்கி விட்டு அவற்றைத் தட்டிப்பறித்துச் சென்றுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் இத்தகவலை ரோய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரத்த மாதிரிகள் அடங்கிய நான்கு புட்டிகள் குரங்குகள் கையில் சிக்கி உள்ளன. இதனால் அவை வைரஸ் தொற்றுக்கு இலக்காகுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது.

குரங்குகள் இரத்தமாதிரிகளை பொது இடங்களில் சிந்தச் செய்தனவா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அயலில் வசிப்போர் மத்தியில் இந்த சம்பவம் வைரஸ் பீதியைக் கிளப்பி உள்ளது.

இந்தியாவின் பல நகரங்களிலும் குரங்குகள் பெருகி அவை குடிமனைப்பகுதிகளில் மனித வாழ்க்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றம் அருகிலும்கூட குரங்குகள் கூடி கும்மாளம் அடிப்பதை நகர அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

காடுகளும் மரங்களும் பெருமளவில் அழிக்கப்படுவதாலேயே குரங்குகள் உணவு தேடி ஊர்மனைகளுக்குள் குடியேறுகின்றன என்று வனவிலங்கு அமைப்புகள் கூறுகின்றன.

மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு தொற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும் உலகின் எப்பகுதியிலும் ‘கோவிட் 19’ வைரஸ் குரங்குகளுக்குத் தொற்றியதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் மனித மரபணுக்களோடு ஒத்த உடலியல் தன்மை கொண்ட குரங்குகளை வைரஸ் இலகுவில் தொற்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

30-05-2020

(குமாரதாஸன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here