சமூகவலைத்தளங்கள் திருந்தாவிட்டால் அவற்றை முடக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார். அதனை அவர் தனது சமூகவலைத்தளமான ரூவீற்றரிலேயே பதிவிட்டிருக்கின்றார்.
அதிபர் ட்ரம்ப்பின் அண்மைய இரண்டு பதிவுகள் ‘தவறாக வழிநடத்தக்கூடிய’ ‘உறுதிசெய்யப்படாத’ கருத்துகளைக் கொண்டவை என்று ரூவிற்றர் நிறுவனம் பதிலிட்டிருந்தது.
இதனால் கடுப்படைந்துள்ள ட்ரம்ப், இன்றைய தனது பதிவில் ரூவீற்றரை திருப்பி அடித்திருக்கிறார்.
‘சமூக ஊடகத் தளங்கள் பழமைவாதக் குரல்களை செவிமடுப்பதில்லை என்று குடியரசுக்கட்சினர் கருதுகின்றனர். இதனைத் தடுப்பதற்காக அவற்றைக் கட்டுப்படுத்தப் போகிறோம்’ என்று ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 80 லட்சம் பேர் பின்தொடர்ந்து பார்க்கின்ற அதிபர் ட்ரம்ப்பின் ரூவீற்றர் பதிவுகள் அடிக்கடி சர்ச்சைகளை உருவாக்கிவருகின்றன.
தேர்தல்களில் தபால் மூல வாக்களிப்பு என்பது கள்ள வாக்குப் போடுதல், வாக்குகளைத் திருடுதல் போன்ற மோசடிகளைப்புரிய வெற்றுக் காசோலை வழங்குவதை போன்றது என்றும் தபால் வாக்களிப்பு முறை நாட்டில் வேரூன்ற அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்து அதிபர் ட்ரம்ப் ரூவீற்றர் பதிவுகளை இரு தினங்களுக்கு முன்னர் இட்டிருந்தார்.
எதிர்காலத் தேர்தல்கள் மீதான நம்பகத் தன்மையைப் பாதிக்கக் கூடிய இக்கருத்தை அமெரிக்காவின் அதிபர் தெரிவித்தது பெரும் சலசலப்பை உருவாக்கியது. இதனால் குழப்பமடைந்த ரூவீற்றர் நிறுவனம் அவரது அந்தப் பதிவின் கீழ் ‘உள்ளடக்கத்தைச் சரிபார்க்கவும்’ (fact check) என்று அடிக்குறிப்பு ஒன்றை முதல் முறையாக வெளியிட்டிருந்தது.
இந்த அடிக்குறிப்பைக் கண்டு ஆத்திரமடைந்த ட்ரம்ப் சமூகத் தளங்களை மிரட்டும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
27-05-2020
(குமாரதாஸன்)