யாழ்.வல்லிபுரத்தில் காவல்துறை மீது மிதிவெடித் தாக்குதல்!

0
353

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர்கள் தொலைவில் சுற்றுக் காவலில் ஈடுபடும் காவல்துறையினரை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் மிதி வெடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் சிக்கி பருத்தித்துறைக் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏ.எஸ். பெர்னான்டோ (வயது 25) என்பவர் காயமடைந்தார்.

இவர் அண்மையில் மாற்றலாகி பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்.

காலில் காயமடைந்த அவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மிதி வெடி ஒன்று காவல்துறையை இலக்கு வைத்து அந்த இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சம்ப இடத்தில் காவல்துறை மற்றும் தரைப்படை அதிகாரிகள்,. சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

‘‘சுற்றுக் காவலுக்குச் செல்லும் காவல்துறையினர் கள்ள மணல் ஏற்றிச் செல்பவர்களைப் பிடிப்பதற்காக அந்த இடத்தில் தரித்து நிற்பது வழமை.

இதனை அவதானித்து கடமைக்கு வரும் அவர்களை இலக்கு வைத்து இந்த மிதி வெடி அந்த இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடும்‘‘ என்று அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

பெர்னான்டோவும் மற்றொரு காவலரும் உந்துருளிகளில் வந்து அந்த இடத்தில் நின்றபோது காலடியில் ஏதோ மிதிபடுவதாக உணர்ந்த பெர்னான்டோ காலைத் தூக்கியபோது வெடிச்சத்தம் கேட்டதாகவும்,

உடனடியாக பெர்னான்டோவின் கால்களில் இருந்து குருதி கசியத் தொடங்கியதை அடுத்து அவரை மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் மிதி வண்டி (சைக்கிள்) சக்கரத்திற்குப் பயன்படுத்தும் சிறிய அலுமினிய உருளைகள் (போல்ஸ்) சிதறிக் கிடப்பதுடன் வயர்த் துண்டுகளையும் காணப்படுகின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறப்பு அதிரடிப் படையினரின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல்களை நடத்தினர்.

அந்தப் பகுதியில் வேறு குண்டுகளும் புதைக்கப்பட்டிருக்கின்றனவா என்று அவர்கள் சோதனை நடத்தினர்.

வெடித்த குண்டின் வகை மாதிரி தொடர்பில் பகுப்பாய்வு செய்தனர்.

அவர்கள் தமது பணியை முடித்ததைத் தொடர்ந்து காவல்துறை தடயவியல் பிரிவினர் அந்த இடத்தில் ஆதாரங்களைச் சேகரித்தனர்.

அதுவரையில் சம்பவ இடத்திற்குள் நுழைய எவரையும் காவலர்கள் அனுமதிக்கவில்லை.

வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து மின் கலம் (பற்றறி), உலோகக் உருளைகள் (போல்ஸ்), வெடிப்பை உந்தும் டெட்டனேட்டர் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றை இணைத்து உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட மிதி வெடி ஒன்றே தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

போர்க் காலப் பாணியில் காவலர்களை இலக்கு வைத்து ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறித்து அதிகாரிகள் பெரிதும் கரிசனை கொண்டுள்ளனர்.

கள்ள மணல் கடத்துபவர்கள் தமக்கு இடைஞ்சலாக காவலர்கள் உள்ளனர் என்ற நோக்கில் அவர்களை அச்சுறுத்துவதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது வேறு பின்னணிக் காரணங்கள் இருக்கின்றனவா என்பது பற்றி அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

(தமிழ்ச்செய்தி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here