வரலாற்றுப் பிரசித்திமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கல் இன்று (முதலாம் திகதி திங்கட்கிழமை) சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமை பெற்றுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொங்கல் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். குறிப்பாகக் கோவிலுக்கு வருகை தரவுள்ள பக்தர்களின் நன்மை கருதி இ.போ.சபையினராலும் தனியார் போக்குவரத்து சங்கத்தினராலும் விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆலயச் சூழலில் குடிதண்ணீர் மற்றும் இதர தேவைகளுக்கான நீர் விநியோகமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயச் சூழலின் துப்பரவுப் பணிகளைக் கரைதுறைப் பற்று பிரதேச சபையினர் மேற்கொண்டனர். ஆலயச் சூழலுக்கான சுகாதார மேற் பார்வை மற்றும் கண் காணிப்பு நடவடிக்கைகளினை முல்லைத்திவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் மேற்கொண்டுள்ளனர். அவசர தேவை கருதி விசேட வைத்திய சேவைக்குழுவினர் மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்கு மற்றும் பக்தர்களின் பாதுகாப்புப் பணிகளில் விசேட பொலிஸார் சீருடையுடனும் சிவில் உடையுடனும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வற்றாப்பளை பொங்கலின்போது வருட வருடம் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் ஒன்றுகூடுவது வழமை. இந்த வருடமும் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களை எதிர்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் தாக சாந்திக்காக முள்ளியவளை, தண்ணீரூற்று, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதிகள் எங்கும் வீதி தோறும் தாக சாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.