பாரிஸில் சிறிய வீடொன்றில் மறைந்து வாழ்ந்த பெலிஸியன் கபுஹா( Felicien Kabuga) கைதுசெய்யப்பட்ட மாடிக் குடியிருப்புக்கு அயலில் வாழ்வோர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை.
“அதிகாலையில் எங்கள் கட்டடத்துக்குள் திடுதிப்பென நுழைந்த பொலீஸ் படையினர் முதியவர் ஒருவரைப் பிடித்துக்கொண்டு இறங்குவதை ஜன்னல் வழியே கண்டேன். அவர் ஒரு நோயாளி போலத் தளர்ந்து காணப்பட்டார். ஆமையைப்போல மெல்ல ஊர்ந்து நடந்து சென்றார்.கையில் விலங்குகள் கூட இடப்படவில்லை..”
” அவரை முன்னரும் நமது தெருவில் கண்டிருக்கிறேன். பெரிதாக எதுவும் பேசமாட்டார். வணக்கம் மட்டும் சொல்வார். தனியே அல்லது வேறு ஒருவருடன் வெளியே போய் வருவார்..”
“ஒரு பெரும் இனப்படுகொலைக் குற்றத்துக்காக தேடப்பட்ட ஒருவர்தான் அவர் என்று செய்தியில் பார்த்தபோது அதிர்ச்சி..நம்பவே முடியவில்லை. உலக நாடுகள் வலைவிரித்துத் தேடிய ஒரு போர்க்குற்றவாளியுடனா இதுவரை ஒன்றாய் அயலில் வாழ்ந்திருக்கிறோம் என்ற ஆச்சரியம்..எமக்கு. ஹிட்லருடன் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வே வந்துபோனது.. “
பாரிஸின் புறநகரான அனியே சூ சென்னில் (Asnières-sur-Seine) உள்ள அந்தக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் மேலிட இப்படிச் சொல்கிறார்கள். அவர்களது செவ்விகளை பிரெஞ்சு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
றுவாண்டா நாட்டு துட்சி இனத்தவர் மீதான இனப்படுகொலைகளின் முக்கிய சூத்திரதாரியான 84 வயதுடைய பெலிஸியன் கபுஹா(Félicien Kabuga) கடந்த வாரம் இந்தப்பகுதியில் வைத்துத்தான் பிரெஞ்சுப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
சுமார் 26 ஆண்டுகள் தனது அங்க அடையாளங்களை மாற்றி மாற்றி பல நாடுகளில் ஓடி ஒளிந்து மறைந்து வாழ்ந்த கபுஹா கடைசியில் பாரிஸில் கைதாகி இருப்பது உலகெங்கும் துட்சிகள் இடையே பலத்த வரவேற்புடன் கூடிய உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆயினும் இக் கைது அவர்களுக்கான நீதியை வழங்கி விட்டது என்று எண்ணிவிட முடியாது.
இருபதாம் நூற்றாண்டின் இறுதி இனப்படுகொலையாகப் பார்க்கப்படும் றுவாண்டாவின் இரத்தம் தோய்ந்த இன அழிப்பு வரலாற்றின் நினைவுக் கோவைகளை இந்தக் கைது மீண்டும் ஒருதடவை தூசி தட்டியிருக்கிறது. அவ்வளவுதான்.
தமது இனம் சந்தித்த மிகக் கொடூரமான இனப்படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவை துட்சி மக்கள் நினைவு கூருகின்ற சமயத்தில் அந்தப் படுகொலைகளின் முக்கிய சூத்திரதாரி பிடிபட்டிருக்கிறார்.
இதேபோன்று இருபத்தோராம் நூற்றாண்டின் முதலாவது இனஅழிப்பாகப் பதிவாகியிருக்கும் முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் ஈழத்தமிழர்களும் சமகாலத்தில் அந்த நாட்களை நினைவு கூருகின்றனர்.
இவ்விரு இனப்படுகொலைகளும் நினைவுகளில் ஒன்றிணைகின்ற வரலாற்றுத் தருணத்தில் கபுஹாவின் கைது நடந்திருப்பது பிரான்ஸில் வாழும் புலம் பெயர் தமிழர்களின் கவனத்தையும் அதன் மீது பெருமளவில் ஈர்த்திருக்கின்றது.
யார் இந்த பெலிஸியன் கபுஹா? றுவாண்டா இனப்படுகொலையில் அவர் பங்கு என்ன?
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடு றுவாண்டா. இங்குள்ள பிரதான சமுகங்களான ஹுட்டு(Hutu) , துட்சி(Tutsis) இனங்களுக்கு இடையேயான பகைமை நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டது.
1994 இல் சிறுபான்மை துட்சி மக்கள் பெரும்பான்மை ஹுட்டு ஆட்சியாளர்களால் கூட்டாக இனப்படுகொலை செய்யப்படும் வரை நீண்டகாலம் அங்கு பதவில் நீடித்து இருந்தவர் அதிபர் யுவனல் ஹபியறிமனா (Juvenal Habyarimana). ஒரு ஹுட்டு இனவாதத் தலைவரான இவருக்கு மிக நெருக்கமான உள் வட்டத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களில் ஒருவர்தான் செல்வந்தர் பெலிஸியன் கபுஹா.
கபுஹாவின் புதல்விகளில் ஒருவர் அதிபர் ஹபியறிமனாவின் மகனை திருமணம் செய்திருந்தார். அதனால் இவர்களுக்கு இடையே நெருக்கமான குடும்ப உறவு முறையும் இருந்தது.
றுவாண்டாவில் பிரபலமான செல்வந்தர்களில் ஒருவரான கபுஹா கிழக்கு ஆபிரிக்காவின் தேயிலை, கோப்பி தோட்டங்கள் பலவற்றின் சொந்தக்காரர்.
றுவாண்டா சனத்தொகையில் 14 வீதமான எண்ணிக்கை கொண்ட சிறுபான்மையின துட்சிகளின் ஆதரவுடன் றுவாண்டாவை மீட்பதற்காக அண்டை நாடான உகண்டாவில் உருவாக்கப்பட்ட தீவிரவாத இயக்கம் றுவாண்டா தேசபக்த முன்னணி(Rwandan Patriotic Front RPF).
அதிபர் ஹபியறிமனாவை பதவியில் இருந்து அகற்ற தேசபக்த முன்னணி உள்நாட்டுப்போரைத் தொடக்கியது. அரசுப்படைகளுக்கும் துட்சி மக்களின் அந்த தேசபக்த முன்னணி தீவிரவாதிகளுக்கும் இடையே 1991 முதல் ஆரம்பித்த இந்த உள்நாட்டுப் போர் 1994 இல் துட்சி மக்களின் இனப்படுகொலைகளுடனேயே முடிவுக்கு வந்தது.
அதே ஆண்டில் அதிபர் ஹபியறிமனா உயிரிழந்த ஒரு தாக்குதல் சம்பவமே இனப்படுகொலைகளின் தொடக்கமாக அமைந்தது.
1994 ஏப்ரல் 6 ஆம் திகதி றுவாண்டா அதிபர் ஹபியறிமனாவும் அயல் நாடான புறுண்டி நாட்டின் அரசுத் தலைவரும் ஒன்றாகப் பயணம் செய்த விமானம் றுவாண்டாவின் தலைநகர் கிஹாலி( Kigali) வான் தளம் அருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.
தரையில் இருந்து ஏவப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலினாலேயே விமானம் வீழ்ந்து நொறுங்கியது. றுவாண்டா தேசபக்த முன்னணியே இத்தாக்குதலை நடத்தியது என்று அரசு உடனடியாகக் குற்றஞ் சாட்டியது.ஆனால் அதிபரின் உள் வட்டத்தைச் சேர்ந்தவர்களின் சதி வேலையே அது என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுதலித்தது தேசபக்த முன்னணி.
ஆயினும் றுவாண்டா இனப் படுகொலைகள் ஆரம்பிப்பதற்கு இந்த விமான அனர்த்தமே உடனடிக்காரணமாக மாறியது.
அதிபரின் திடீர் மறைவை அடுத்து உருவான அதிகார வெற்றிடத்தை அவரது சகாக்களான ஹுட்டு இனவாதிகள் கைப்பற்றுகின்றனர். அதிபரின் மரணத்தால் எழுந்த உணர்வலைகள் துட்சிகளுக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. இதுதான் சந்தர்ப்பம் எனப்பார்த்து துட்சிகள் மீதான வன்முறைகள் கட்டவிழ்கின்றன.
அச்சமயம் அரசில் செல்வாக்கு மிக்கவராக மாறிய பெலிஸியன் கபுஹா, தனது வளங்களைப்பாவித்து துட்சி மக்களுக்கு எதிரான இனப் படுகொலையைக் கட்டமைக்கிறார்.
தனது நிதியில் ஆயிரக்கணக்கான ஹுட்டு இளைஞர்களைத் திரட்டி Interahamwe என்னும் துணைப்படையை நிறுவி அவர்களுக்கு வாள்களையும் கத்திகளையும் விநியோகிக்கிறார். இதற்கென வெளிநாட்டில் இருந்து வாள்களும் கூரிய ஆயுதங்களும் அவரது நிதியில் தருவிக்கப்படுகின்றன. தொலைக்காட்சி, வானொலி சேவை (Radio Television Libre des Mille Collins) ஒன்றைத் தொடக்கி அதன் மூலம் துட்சிகளைக் கொல்லுமாறு இனவாதப் பிரசாரங்களையும் கபுஹா முடுக்கிவிடுகிறார்.
நாடு முழுவதும் துட்சி மக்கள் கண்ட கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படுகின்றனர். தப்பி ஓடியோரை ஹுட்டுக்கள் வீதித்தடைகள் போட்டு மறித்து வெட்டிச் சாய்க்கின்றனர். சடலங்கள் துண்டுகளாக ஆறுகளில் வீசப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கில் துட்சி இனப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படுகின்றனர். பல லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளைத் தேடி ஓடித் தஞ்சம் அடைகின்றனர்.
துட்சிகளைக் கொல்ல மறுப்புத் தெரிவித்த ஹுட்டு இனப் பொது மக்களும் கொல்லப்படுகிறார்கள். அதிபர் ஹபியறிமனாவின் அரசியல் எதிரிகளான முற்போக்கு ஹுட்டு தலைவர்களும் கூட படுகொலை செய்யப்படுகின்றனர்.
படுகொலைகளில் தப்பிப் பிழைத்த துட்சி இன மக்கள் தங்கள் தேசபக்த முன்னணியினரோடு இணைந்து அரசுப்படைகளைத் தொடர்ந்து தாக்கித் தோற்கடித்து தலைநகர் கிஹாலியைக் கைப்பற்றியதோடு இந்த இனப்படுகொலை முடிவுக்கு வந்தது. அச்சமயம் றுவாண்டாவின் மொத்த துட்சி மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இன அழிப்புச் செய்யப்பட்டிருந்தனர்.
1994 ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் ஜூலை வரை நீடித்த இந்த மிலேச்சத்தனமான இன அழிப்பில் சுமார் எட்டு லட்சம் பேர் கொலையுண்டதாகப் பின்னர் மதிப்பிடப்பட்டது. சுமார் 100 நாட்களில் வெறும் வாள்கள், கத்திகள் கொண்டு மட்டும் நடத்தி முடிக்கப்பட்ட ஒரு குரூர இன அழிப்பாக உலகம் இதனைக் காண நேர்ந்தது.
உலக நாடுகள் கைகட்டிப் பாத்திருக்க நடந்தேறிய இந்தக் கொலைக்களமே மிக மோசமானதோர் இன அழிப்பாக உலக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தேச பக்தப் படைகள் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியதை அடுத்து கபுஹா போன்ற முக்கிய ஹுட்டு இன சூத்திரதாரிகள் றுவாண்டாவை விட்டுத் தப்பி ஓடித் தலைமறைவாகினர்.
அதன் பின் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட றுவாண்டாவுக்கான சர்வதேசப் பொறிமுறை நீதிமன்றம் கபுஹாவையும் தேடப்படும் ஒரு முக்கிய குற்றவாளியாக அறிவித்தது.
சர்வதேச குற்ற விசாரணைகளுக்காகத் தேடப்பட்ட கபுஹாவை கைது செய்யும் பிடி ஆணையை ‘இன்ரபொல்’ விடுத்திருந்தது. இவரைப்பற்றிய தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்காவும் அறிவித்திருந்தது.
கபுஹா பின்னர் சுவிஸ், ஜெர்மனி, பெல்ஜியம், கொங்கோ போன்ற நாடுகளில் ஒன்றில் தண்டனை எதுவும் இன்றித் தலைமறைவாக வாழ்ந்துவந்துள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. சுவிஸில் அவரது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்க கப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
கபுஹாவின் நிதி ஆதாரங்களும் அவருக்கிருந்த வெளித் தொடர்புகளுமே நீண்டகாலம் வெளிநாடுகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்த அவருக்கு உதவியாக அமைந்தன என்று சொல்லப்படுகிறது.
கபுஹாவைக் கைது செய்யும் இறுதி முயற்சிகள் கடந்த மார்ச்சில் பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் பரிமாறிக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன என்று இப்போது தெரிவிக்கப்படுகிறது.
இந்நாடுகளில் வசிக்கும் அவரது பிள்ளைகளின் நடமாட்டங்கள் பற்றிய தகவல்களின் அடிப்படையில் நடத்திய தேடுதல்கள் பாரிஸில் கபுஹா அவரது பிள்ளைகளாலேயே பாதுகாக்கப்பட்டு வந்ததைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது.
பிள்ளைகளில் ஒருவர் அனியே சூ சென்னில் (Asnières-sur-Seine) வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்த தகவலும் அந்த வீட்டில் மற்றொரு நபரும் கூடவே வசிக்கின்ற விடயமும் தெரியவரவே அப்பகுதி நீண்ட நாள்களாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது. இறுதியில் கபுஹாவின் மறைவிடம் அதுதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் அவர் உலகெங்கும் சுமார் இருபது போலிப் பெயர்களுடனும் போலி ஆவணங்களுடனும் 25 ஆண்டுகாலம் மறைந்து வாழ்ந்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை அதி காலை ஐந்து மாடி கட்டடத்தில் உள்ள கபுஹாவின் வீட்டினுள் பொலிஸ் அதிரடிப்படையின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைக் கண்டறியும் விசேட பிரிவினரே (Gendarmerie’s Central Office for Combating Crimes Against Humanity) அதிரடியாக உள் நுழைந்து அவரைக் கைதுசெய்துள்ளனர். அதன்போது கபுஹா எதிர்ப்பு எதனையும் காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது.
பின்னர் அவர் பாரிஸில் உள்ள சுகநல சிறையில் (La Santé Prison) அடைக்கப்பட்டார். பிரெஞ்சு சட்டங்களுக்கு கீழான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
1997 இல் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் நிறுவப்பட்ட றுவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் பொறிமுறை நீதிமன்றம் தான்சானியாவின் ஆருஷா(Arusha) நகரில் செயற்படுகிறது. முதலில் அங்கு ஆஜர் செய்யப்பட்ட பிறகே நெதர்லாந்தின் ஹேக் நகரில் இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அவர் கொண்டு செல்லப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
இன அழிப்பு, இனப்படுகொலைகளை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தூண்டியமை, உட்பட மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் அடங்கிய ஏழு குற்றச்சாட்டுகள் பெலிஸியன் கபுஹா மீது சுமத்தப்பட்டுள்ளன.
கபுஹாவைப் போன்ற இன்னும் சில முக்கிய இன அழிப்பு புள்ளிகள் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு துட்சி மக்களுக்கான சர்வதேச நீதி நிலைநாட்டப்படுவதற்கு இன்னும் நீண்ட காலங்கள் காத்திருக்கவேண்டி இருக்கும்.
படங்கள் :1 பெலிஸியன் கபுஹா 2 கபுஹா வின் பாரிஸ் மறைவிடமான ஐந்து மாடி கட்டடம். 3 தப்பி ஓடி தான்சானியாவில் தஞ்சம் புகுந்த துட்சி மக்கள் (1994)
24-05-2020
(குமாரதாஸன்)