விமானம் இரண்டு தடவை தரையிறங்க முயற்சித்தது ஆனால் சக்கரங்கள் இயங்கவில்லை என பாக்கிஸ்தானின் பயணிகள் விமானம் நேற்று மொடல் கொலனியில் விழுந்து நொருங்குவதற்கு முன்னர் விமானி மேற்கொண்ட இறுதி நேர முயற்சியை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமானம் இரண்டு தடவை தரையிறங்க முயற்சித்தது ஆனால் சக்கரங்கள் இயங்கவில்லை அதன் கீழ்ப்பகுதி தரையை தொட்டவேளை விமானவோட்டி மீண்டும் அதனை மேலேசெலுத்தினார் என மொடல் கொலனியில் வசிக்கும் இஜாஸ் மாசி என்பவர் தெரிவித்துள்ளார்
.
இரண்டாவது தடவை அவர் அவ்வாறு செய்ய முயற்சித்த வேளை சக்கரத்தில் தீப்பிடித்திருப்பதை பார்த்தேன் ஓடுபாதையை உரசியதால் அது இடம்பெற்றிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடவை அதுவரவில்லை. ஆனால் விழுந்து நொருங்கியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஒரு துப்புரவுபணியாளன், நான் இந்த விடயங்களில் நிபுணன் இல்லை. நான் விமானம் தரையிறங்கியதும் உள்ளே சென்று சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடவிருந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
விமானவோட்டி மீண்டும் மீண்டும் மேலே செல்வதற்கு முயற்சித்ததற்கு பதில் அந்தசதுப்பு நில ஒடுபாதையில் விமானத்தை தரையிறக்கியிருக்கவேண்டும் என நான் நினைக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சியின் மக்கள் அதிகளவு வாழும் சனநெரிசல் உள்ள பகுதி மொடல் கொலனி.
இப்பகுதியிலேயே நேற்று வெள்ளிக்கிழமை பாக்கிஸ்தான் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது.
மொடல் கொலனி நகரத்தின் புறநகர் பகுதியில் ஜின்னா விமானநிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
ஜின்னா விமானநிலையத்திலேயே விமானம் தரையிறங்கியிருக்கவேண்டும்.
எனினும் இரு பக்கங்களும் வீடுகளை கொண்ட குறுகிய மூடப்பட்ட வீதிகளையுடைய மொடல் கொலனியில் விழுந்து நொறுங்கியது. அந்தப்பகுதி மக்கள் தங்கள் கார்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தும் பகுதியில் விமானம் விழுந்து நொருங்கியுள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் தீப்பிடித்து எரிந்தன.
விமானம் விழுந்து நொறுங்கிய பகுதி மிகவும் நெரிசலாக காணப்பட்டதால் மதிலின் ஒரு பகுதியை உடைத்தே மீட்பு பணியாளர்கள் விமானத்தை நெருங்கினார்கள்.
விமானம் விழுந்து நொறுங்கியதும் அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பதிவு செய்த வீடியோக்களை வெளியிட்டனர்.
அந்த வீடியோக்களில் விமானம் விழுந்த பகுதியிலிருந்து கரும்புகை மண்டலம் எழுவதை காணக்கூடியதாகயிருந்தது.
விமானம் விழுந்து நொறுங்கிய நேரத்தில் தனது வீட்டின்கூரையில் பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தான் பார்த்ததை விபரித்துள்ளான்.
நாங்கள் பட்டம்விட்டு விளையாடிக்கொண்டிருந்தோம், அவ்வேளை விமானம் வழமைக்கு மாறாக விமானநிலையத்தை நோக்கி செல்லாமல் எங்கள் பகுதியை நோக்கி வருவதை பார்த்தோம் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
பாரிய சத்தமொன்று கேட்டது,அதன் பின்னர் புகைமண்டலம் எழுந்தது, நாங்கள் உடனடியாக அந்த பகுதி நோக்கி ஓடினோம் எனினும் பின்னர் அருகில் நெருங்கி செல்வதை தவிர்த்துக்கொண்டோம் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
மொடல் கொலனியில் வசிக்கும் தங்கள் குடும்பத்தவர்கள் உறவினர்களின் நிலை குறித்து அறிவதற்காக பலர் அந்த பகுதியை நோக்கி விரைந்தனர்.
இதன் காரணமாக கையடக்க தொலைபேசிகளிற்கான சிக்னல் பாதிக்கப்பட்டது.
மொடல் கொலனியில் வசிக்கும் எனது உறவினர் குறித்து அறிவதற்காக அவரது தொலைபேசியை தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால், முடியவில்லை என தெரிவித்தார் சப்டார் அலி என்பவர்.
பாதுகாப்பு படையினர் என்னை உள்ளே செல்வதற்கு அனுமதிக்கின்றார்கள் இல்லை யாரும் எந்தத் தகவலையும் தருகின்றார்கள் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
லாகூரில் இருந்து கராச்சி நோக்கி நேற்று பயணித்த இந்த விமான விபத்தில் 97 பேர் உயிரிழந்தனர். இருவர் உயிர் தப்பியுள்ளனர்.