பாரிஸில் மக்களைக் கவர்ந்த அன்னக் குஞ்சுகள்!

0
386

பாரிஸில் கிறீமி பாலம் (Pont de Crimée) அருகே நீரேரி ஓரமாக ஒரு கூட்டில் அன்னக்குஞ்சுகள் பொரித்துள்ளன. மிக அரிதான இந்த நிகழ்வு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுமார் ஒருமாத காலம் முன்னர் பாலத்தின் அருகே பார்வைக்குத் தெரியக்கூடிய இடத்தில் ஜோடியாக இரண்டு அன்னப்பறவைகள் அடிக்கடி தென்பட்டுள்ளன. பொது முடக்கம் ஏற்படுத்தியிருந்த அமைதியான சூழலை அடுத்து அங்கு அவை கூடு கட்டி முட்டைகளை இட்டு அடைகாத்து வந்துள்ளன.

பாரிஸ் 19 வட்டாரத்தில் உள்ள சிறு கிளை நீரேரியின்(Rouvray canal) ஓரமாக மிதவை ஒன்றில் உள்ள அக் கூட்டில் இரண்டு குஞ்சுகள் காணப்படுகின்றன. கூட்டினுள்

மேலும் ஐந்து முட்டைகள் உள்ளதால் அடுத்துவரும் நாள்களில் புதிய குஞ்சுகளின் வரவு எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உள்ளிருப்பு முடிவடைந்து அப்பகுதியில் தற்போது சனப் புழக்கம் அதிகரித்திருப்பதால் அமைதி குலைந்து தாய்ப்பறவை முட்டைகளைக் கைவிட்டுக் கலைந்து போய்விடக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது.

அழிந்து வரும் இந்த அரிய வகை அன்னப்பறவைகளின் அழகிய குஞ்சுகள் களவாடப்பட்டு விற்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

பாரிஸின் விலங்குகள் நலன் பேணும் அமைப்பின் (Paris Animaux Zoopolis-PAZ) கோரிக்கையை அடுத்து கூட்டுக்கு நெருக்கமாக ஆட்கள் செல்வதைக் கட்டுப்படுத்த நகரசபை அங்கு தடைகளைப் போட்டுள்ளது.

அன்னக்குஞ்சுகளைப் பார்க்கப் பலரும் அப்பகுதியில் கூடுவது புதிதாகக் குஞ்சுகள் பொரிப்பதைப் பாதிக்கும் என்று PAZ அமைப்பினர் கருதுகின்றனர்.

பிரெஞ்சு மொழியில் cygnes tuberculés எனப்படும் இந்த அரியவகை அன்னப்பறவைகள் (mute swans) வாத்து இனத்தைச் சேர்ந்தவை. மனிதர்களுக்கு நெருக்கமாக பழகக் கூடியவை. உரத்து சத்தம் எழுப்பாத அமைதியான சுபாவம் கொண்டவை.

(படங்கள் :Francebleu.)

(குமாரதாஸன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here