பிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி!

0
771

                        பிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் அமைப்பினர் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு புலம்வாழ் இளையோருக்கு பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் செய்தி ஒன்றை விடுத்துள்ளனர். அதன் முழுவிபரம் வருமாறு:-            

கடந்த ஆண்டின் பேரெழுச்சியை மனதில் நிறுத்தி இந்த ஆண்டில் உறுதியோடு முன்னெடுப்போம்!

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளின் 11ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளோம். இந்த ஆண்டு அனைவருக்கும் தடைகள் நிறைந்த ஆண்டாகவே உள்ளது. காரணம் உலகையே அச்சுறுத்தி நிற்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமியால் எழுந்துள்ள மோசமான நிலையே என்பது அனைவரும் அறிந்ததே.
இருப்பினும் கடந்த ஆண்டின் பேரெழுச்சியை மனதில் நிறுத்தி இந்த ஆண்டு அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக நினைவேந்தலை உறுதியோடு முன்னெடுப்போம். பரவலாக இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் எமது வசதிக்கு ஏற்றாற்போல் கலந்துகொள்ளலாம். அனைத்து நாடுகளிலும் உள்ள இளையோர்கள் இவ்வாறான நிகழ்வுகளை தமது கைகளில் எடுத்து பொறுப்போடு செய்வதற்கு முன்வரவேண்டும்.
தாயகத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழினப் படுகொலை வாரத்தில் தினமும் நினைவேந்தலை மேற்கொண்டு வருகின்றார்கள். ஊடகவியலாளர்கள் பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இருப்பினும் படையினரின் கெடுபிடிகளையும் மீறி செய்திகளைச் சேகரித்து, புகைப்படங்களை எடுத்து ஊடகங்களில் நேர்த்தியாக பதிவிட்டுள்ளமை எம்போன்ற புலம்வாழ் இளையோரை உற்சாகமூட்டுவதாய் அமைவதுடன் எழுச்சி கொள்வதற்கு உந்துசக்தியாகவும் அமைந்துவிடுகின்றது.
இவ்வாறான இளம் சமூகத்தைப் பார்த்தாவது, புலத்தில் வாழும் இளையோர்கள் தேசம் நோக்கிய பணிகளைச் செய்வதற்கு முன்வரவேண்டும். தத்தமது வாழிட நாடுகளில் மொழிப் புலமையைப் பயன்படுத்தி எமது இன மக்களின் அழிப்பை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டவேண்டும்.
2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கூறியது போன்று, புலம்பெயர் இளைஞர்களின் கைகளிலேயே எமது போராட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆயினும் இலட்சியப் பயணம் ஒன்றுதான்.
எனவே எமது இலட்சியப் பயணத்தில் இளையோர் நாம் ஒன்றுபட்டுப் பயணிப்போம் என இந்தத் தமிழின அழிப்பு நினைவேந்தல் நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here