கிளிநொச்சியின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கோரக்கன்கட்டு இரண்டாம் கட்டை என்ற இடத்தில் நேற்று மாலை 13 வயதான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இராசையா கமலேஸ்வரி என்ற சிறுமியின் சடலமே கிணற்றிற்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கோரக்கன்கட்டு குடியிருப்பில் வசிக்கும் இந்த சிறுமி நேற்று காலையிலிருந்து காணாமல் போயிருந்தார். அண்மைக்காலமாக சிறுமிகள் மீதான வன்முறைகளையடுத்து உறவினர்கள் பதற்றத்துடன் பல இடங்களிலும் தேடுதல் நடத்தினார்கள்.
மாலை நான்கு மணியளவில் அங்குள்ள கிணறொன்றிற்கு அருகில் சென்ற ஒருவர், கிணற்றுவாளியொன்று தரையில் கிடப்பதையடுத்து சந்தேகத்தில் கிணற்றை எட்டிப்பார்த்தபோது கிணற்றிற்குள் சிறுமி சடலமாக காணப்பட்டுள்ளார்.
உடனடியாக கிளிநொச்சி பொலிசாரிற்கு தகவல் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் சிவபாலசுப்ரமணியம் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சிறுமியின் தாய் மத்தியகிழக்கு நாடொன்றிற்கு பணிப்பெண்ணாக சென்றுவிட்டார். தந்தையார் சில தினங்களின் முன்னர் வற்றாப்பளை ஆலயத்தில் வர்த்தகம் செய்வதற்கு சென்றுவிட்டார். சிறுமி உறவினர்களின் கவனிப்பில் இருந்துள்ளார்.