பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்கள் இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து ஈழமுரசு இணைய இதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் இது.
– சந்திப்பு: கந்தரதன்
இன்றைய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரான்சில் எவ்வாறு இருக்கின்றது?
மே 18 நினைவேந்தல் என்பது, ஓர் இனத்தால் ஒரு பூர்வீகக் குடிகளால் மறக்கமுடியாத ஒரு விடயம். இலங்கையின் பூர்வீகக் குடிகளாகிய நாங்கள், காலந்தொட்டு ஓர் அழிவுக்குள்ளாகிக்கொண்டு போகின்றோம். இது இன்று நேற்றல்ல காலனித்துவக் காலத்தில்கூட எமது அடையாளங்கள் மூன்று பேரால் அழிக்கப்பட்டன. முக்கியமாக தென்னிலங்கையில் உள்ள அதாவது தென்முனையில் இருந்த ஒரு சிவ ஆலயம் தான்தோன்றீஸ்வரர் என்று சொல்லப்படுகின்ற இந்த ஆலயம் இல்லாமல் ஆக்கப்பட்டது. அதாவது இலங்கை முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தார்கள். ஈழத் தமிழர்களின் பூர்வீகமே இலங்கை என்ற அடையாளத்தை அழிப்பதற்காக காலந்தொட்டு பலவிதமான சந்தர்ப்பத்தில் பலவிதமான நாடுகள், பலவிதமான செயல்களில் ஈடுபட்டன. அது 1917 இல் தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் பொருளாதார ரீதியில் கை ஓங்கி நிற்கின்றார்கள் என்று அவர்களுக்கெதிராக ஓர் இனத்தை நோக்கிப் பேரினவாதிகளால் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்பின் 1948 இல் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற விடயங்களைப் பார்த்தால் மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பிரதேசங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த விடயங்கள் எல்லாவற்றையும் பார்த்தால், தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அகற்றுவதற்காக சிங்கள பௌத்த பேரினவாதிகளால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட விடயங்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
அதாவது ஒரு நாட்டில் வாழ்ந்த பூர்வீக மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, ஒரு சிங்கள நாடாக மாற்றியமைப்பதற்கான செயற்பாடு, காலப்போக்கில் அரசியல் ரீதியான போராட்டங்களும் பின்னர் அது கைகூடாமல் போனபோது ஆயுதப்போராட்டமாக மாற்றம்பெற்ற சூழலும் ஆயுதம் ஏந்தி எமது நிலங்களைப் பாதுகாக்கவேண்டிய சூழலும் ஏற்பட்டது. ஆனால், எல்லாக் காலகட்டத்திலும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள். இவற்றையெல்லாம் சேர்த்து தமிழின அழிப்பாக நாங்கள் இன்று கூறவேண்டும்.
மே 18 இல் தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாகும். ஐக்கிய நாடுகள் சபை கூறுவதுபோல் 2009 ஜனவரிக்கும் மேக்கும் இடையில் அண்ணளவாக 70 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று ஆதாரபூர்வமாகக் கூறப்பட்டது. இது தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாகும். இந்த உச்சக்கட்ட நாளான மே 18 இனைத்தான் நாங்கள் தமிழின அழிப்பாக நினைவு கூருகின்றோம். அதன் பின்னரும் தமிழின அழிப்பு தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. எங்கள் வாழ்வியல் முறை, கலாச்சார முறை போன்ற விடயங்களில் நாங்கள் பல வழிகளில் அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஆகவே இன அழிப்பு இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எங்களை அந்த நாட்டிலிருந்து முற்றாக அகற்றுவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எவ்வாறு போர்முனைக்குப் போகும்போது திட்டம் வகுக்கப்படுகின்றதோ, அவ்வாறு தமிழினத்தை அழிக்கும் திட்டம் அன்றே போடப்பட்டது. அது இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
ஆகவே இந்த மே 18 உச்ச இனவழிப்பு நினைவேந்தலை, தமிழின அழிப்பின் அடையாளமாக நாங்கள் முக்கியமான திகதியாக வைத்திருக்கின்றோம். வழமையாக இந்த நாள் உலகம் முழுவதும் ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள், கிழக்கு மாகாணத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், தென்னாபிரிக்கத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், மொறிசியஸ் தமிழர்கள் என்று பிரித்துப் பார்க்கமுடியாத அளவிற்கு இந்த இனப்படுகொலை, தமிழர் இனவழிப்பு எல்லோராலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதற்கான நினைவெழுச்சிகள் நடைபெறுகின்றன.
மே 18 தமிழர் சரித்திரத்தில் முக்கியமான அடையாளப்படுத்தப்பட்ட நாளாக இருக்கின்றது. அவ்வாறே ஆர்மேனிய மக்களுக்கு ஏப்ரல் 24 என எல்லா மக்களுக்கும் அவர்கள் இன அழிப்புக்கு உள்ளாகின்றபோது, முக்கிய அடையாளமாக இந்தத் திகதிகள் இருக்கின்றன. அந்தத் திகதியைத்தான் நாங்கள் உலகத்திற்குப் பறைசாற்றுகின்றோம். உலகத்திற்கு இந்த இன அழிப்பு மறக்கமுடியாத ஒன்று. 21 ஆம் நூற்றாண்டில் நடந்த முதல் இன அழிப்பு.
ஆகவே இது சரித்திரத்தில் எழுதப்படவேண்டிய ஒரு விடயம். இதை யார் எழுதுவார்கள்? நாங்கள் தான் எழுதவேண்டும். உலக நாடுகள் இன்று உடனடியாக எழுதுவதற்கு வரமாட்டாது. எங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள், வருவார்கள். ஆனால், அரசு என்று வரும்போது, இனப்படுகொலை என்று வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். சொல்லவைக்கவேண்டியவர்கள் நாங்கள்தான். அதாவது மக்கள். தமிழ் மக்கள் மாத்திரமல்ல எமக்காதரவாக உலகமக்களையும் எங்களோடு இணைத்துக்கொண்டு, இந்த மே 18 தமிழின அழிப்பு, அதாவது உலக மனிதநேயத்திற்கு ஏற்பட்ட பங்கத்திற்கு முக்கியமான ஒரு திகதியாக நாங்கள் வலியுறுத்தி அதை நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகளைச்செய்யவேண்டும்.
அதனால்தான் நாங்கள் எல்லோரும் எல்லா நாடுகளிலும் அதாவது இலங்கையில் மட்டுமல்ல தென்னாபிரிக்கா, மொரிசியஸ் போன்ற ஈழத்தமிழர் இல்லாத நாடுகளிலும் கூட மே 18 தமிழின அழிப்பை நினைவுகொள்கின்றார்கள். அந்த நாள் இங்கு பிரான்சிலும் நடைபெறும். ஆனால், நாங்கள் வழமையாக ஊர்வலமாகச் செல்வோம். செவ்ரோன் பகுதியில் உள்ள இனப்படுகொலை நினைவுக்கல் அமைந்துள்ள இடத்திலும் கிளிச்சி நகரில் அமைந்துள்ள நினைவுத்தூபிப்பகுதியிலும் நினைவேந்தல் செய்வது வழக்கம்.
ஆனால், இன்று கோவிட் 19 நுண்ணுயிரித் தொற்றுக் காரணமாக எல்லோரும் சுமார் இரண்டரை மாதங்களுக்கு மேலாக வீட்டுக்குள் அடைந்து கிடந்தோம். எமது உறவுகள் பலரும் குறித்த நுண்கிருமி காரணமாக எம்மைவிட்டும் இந்த உலகைவிட்டும் பிரிந்து சென்றுள்ளார்கள். இந்தப் பாதிப்புக் காரணமாக நாங்கள் வழமையாக நடத்தும் எழுச்சியுடன் சர்வதேசத்திற்கு எமது நிலையை உணர்த்தும் பேரணி ஊர்வலத்தை செய்யமுடியாத நிலையில் உள்ளோம். காரணம் பிரான்சில் ஒவ்வொரு இடத்திலும் பத்துப் பத்துப் பேராகத்தான் ஒன்றுகூட முடியும். அதற்கு மேல் கூடிக் கைகோர்த்து, கைகுலுக்கி எதுவும் செய்யமுடியாது.
இதேவேளை நினைவேந்தலை மேற்கொள்வதற்கான அனுமதிகள் எந்த நிலையில் உள்ளன?
அதாவது நாங்கள் இதனைப் பரவலாக்குகின்றோம். தற்போது பல மாநகரசபைகள் தமது முதல் அனுமதியைத் தந்துள்ளார்கள். செவ்ரோன், புளோமெனில் திரான்சி, லாக்கூர்னோவ் போன்ற மாகரசபைகள் தமது பிரதேசங்களில் இந்த நினைவு நாளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள். 10 பேர்கள் மட்டும்தான் குறிப்பிட்ட இடங்களில் நிற்கமுடியும். அவ்வாறு நின்றாலும் குறித்த பகுதி மக்கள் நினைவேந்த வரும்போது குறித்த 10 பேரும் விலகி மேலும் 10 பேருக்கு மலர்வணக்கம் செலுத்த சந்தர்ப்பத்தை வழங்கமுடியும். இதனை நாங்கள் யோசித்து, அதற்குரிய அனுமதியைக் கேட்டிருக்கின்றோம். அவற்றுக்குரிய அனைத்து அறிவித்தல்களும் எம்மால் வழங்கப்படும். அதுவரை இன்று இருக்கும் காலசூழ்நிலையில் மே 18 நினைவேந்தல் என்பது பிரதேசவாரியாகப் பரப்பப்பட்டு, அங்கே வாழும் உள்ளுர் மக்களுக்கும் மாநகர சபைகளுக்கும் சென்று சேர்வதற்கு ஒரு மாற்றம் உருவாகியுள்ளது.
ஆகவே நாங்கள் அழிந்துபோகவில்லை. எங்களால் போராட முடியாது என்ற சூழல் வரவில்லை. ஆனால் எமது போராட்டம் பரவலாக்கப்பட்டுள்ளது. அதை இந்த நாட்டுச் சட்டதிட்டத்திற்கு அமைவாக செய்வதற்கு அத்தனை செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பேச்சுக்களை காணொளி வாயிலாகத் தருகின்றார்கள். அவற்றை ஊடகங்கள் வாயிலாக நாங்கள் வெளியிடுவோம். ஆகவே மே18 நினைவேந்தல் தொடர்பில் உலக மக்களுக்குத் தெரிவிக்கும் எமது நியாயப்பாடு குறித்த அத்தனை செயற்பாடுகளும் எம்மால் செய்யப்பட்டுக்கொண்டுதான் உள்ளன. வரும் நாட்களில் குறித்த நிகழ்வுகள் பற்றி மக்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவோம்.
தென்னாபிரிக்கா, மொரிசியஸ் போன்ற நாடுகளில் நடைபெறும் நினைவேந்தல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
குறிப்பிட்ட நாடுகளிலும் உள்ளிருப்புச் சட்டம் நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆனால் அவர்கள் தங்களால் முடிந்த அளவில் நினைவேந்தலைச் செய்வார்கள், மொறிசியஸில் ஈழத்தமிழர்களுக்காக ஒரு தூபி இருக்கின்றது. அந்தத் தூபி அமைந்துள்ள பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட முறையில், ஒரு நினைவேந்தல் இடம்பெறும். அவ்வாறே தென்னாபிரிக்காவிலும் நினைவேந்தல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எங்களுக்கு அவர்கள் தங்கள் ஆதரவைத் தந்துகொண்டுதான் உள்ளனர். இந்தக்கால சூழ்நிலையில் அங்கு மனுக்கள் மூலமாகவும் தகவலை வழங்குவதற்குத் திட்டம் தீட்டியுள்ளனர்.
தமிழர் தாயகப் பகுதிகளில் நினைவேந்தலுக்கு கொரோனாவைக் காரணமாக வைத்து முட்டுக்கட்டை போடுவார்களா?
தாயகத்தில் இருந்து வரும் செய்திகளைப்பார்க்கும் போது அவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். இனி சிறிலங்கா இராணுவம் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஏனென்றால் இந்த கோவிட் 19 காலப்பகுதியில் கூட வடக்கில் இராணுவத்தினர் மிகவும் மோசமாக நடந்துகொண்ட செய்திகளை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது கிழக்கு மாகாணத்திலும் நடந்தது. இராணுவத்தினரை கோவிட் 19 பரிசோதனைக்கெனத் தமிழ் பாடசாலைகளில் விட்டிருந்தமையும் அறிந்திருப்பீர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் ஏதோ ஒரு வகையில் நினைவேந்தலை மேற்கொள்வார்கள் என்பது உறுதி. அதே நேரத்தில் அவர்களால் முடியாவிட்டால் அவர்களின் குரலாகத்தான் நாங்கள் இருக்கின்றோம்.
இன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நினைவேந்தலை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் மக்கள் எவ்வாறு செயற்படவேண்டும்?
எமது மக்கள் மே 18 அன்றோ அல்லது அதற்கு முன்னைய நாட்களில், மே 18 சார்ந்த சின்னங்களை அடையாளப்படுத்த வேண்டும். மே 18 இனைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணியவேண்டும். கடந்தமுறைகூட நாங்கள் மேற்சட்டைகள் (ரிசேட்), சின்னம் பொறிக்கப்பட்ட இலச்சினை (பாட்ஜ்) போன்றவற்றை விநியோகித்திருந்தோம். அவ்வாறானவற்றை அணிந்துகொண்டு உங்கள் கடமைகளைச் செய்வதன்மூலம் சர்வதேசத்திற்கு தமிழினப்படுகொலையை வலியுறுத்தலாம்.
அதேநேரம் மே18 அன்று பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்ளமுடியாதவர்கள் இணையங்களில் வெளியாகியுள்ள பொதுப்படத்தை வைத்து வீடுகளில் நீங்கள் நினைவேந்தலாம். நினைவேந்தல் நடைபெறும் இடங்களுக்குச் செல்பவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணியவேண்டும். தற்போது முகக்கவசம் அணியவேண்டியிருப்பதால், அவற்றையும் கறுப்பு நிறத்தில் அணிந்து உங்கள் எதிர்ப்பை சர்வதேசத்திற்குக் காட்டலாம்.
இவ்வாறு புதுவிதமான போராட்ட சிந்தனைகளை உருவாக்கவேண்டும். எவ்வாறான தடைகள் வந்தாலும் அந்தத் தடைகளை வைத்துக்கொண்டு எப்படி இந்த நாடுகளுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் கூறலாம் என்பதை நாங்கள் சிந்தித்து செயலாற்றவேண்டும். அதேநேரத்தில் இந்த நாட்டில் கோவிட் 19 காரணமாக 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளார்கள். அன்று நாங்கள் அவர்களையும் நினைவுகொள்ளவேண்டும். ஆனால் முள்ளிவாய்க்கால் மே 18 இனை முக்கியமான சிந்தனையாக வைத்துக்கொண்டு, கோவிட் 19 இல் இறந்தவர்களையும் நினைந்து மலர்வணக்கமோ அல்லது சுடர்வணக்கமோ செலுத்துவோம்.
தாயகத்தில் தற்போது முள்ளிவாய்க்கால் வலிசுமந்த இந்தவேளையில் இளைஞர்கள் மத்தியில் கலாச்சார சீர்கெடுகள் அதிகரித்துள்ளனவே…?
இது முக்கியமாகப் பார்க்கப்படவேண்டிய விடயம். 2009 இற்கு முன் பாலியல் வன்முறைகளோ, போதைவஸ்து பாவனையோ, அதிகூடிய மதுபானமோ தமிழர் தாயகத்தில் பாவனைக்கு இருக்கவில்லை. 2009 காலப் பகுதியில் வடக்குக் கிழக்கில் இருந்து கல்வி அடிப்படையில் தமிழர்கள் முன்னிலையில் இருந்தார்கள். போர் இடம்பெற்றிருந்தாலும் அந்தக் காலப் பகுதியில் மேலான கல்வித்திட்டங்கள் வளர்ந்திருந்தன.
ஆனால் 2009 இற்குப்பின் கிறிஸ் மனிதர் என்று கூறினார்கள் அதாவது ஒவ்வொரு காலப்பகுதிக்கும் புது வடிவங்களைக் கொண்டுவந்தார்கள். போதை வஸ்து பாவனை என்று சொல்லும்போது, இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு இராணுவத்தினர் இருக்கின்றார்கள், கடற்படை இருக்கின்றது. காவல்துறையினர் இருக்கின்றார்கள், இவர்களைவிட புலனாய்வாளர்கள் செயற்படுகின்றார்கள். இப்படியான சூழலில் இத்தனை விடயங்கள் அரங்கேறுவது எப்படி?
அதாவது, குழுக்களாக இருக்கட்டும், கொள்ளைகள், வாள்வெட்டுக்கள் போன்ற விடயங்கள் சாதாரணமாக இடம்பெறுகின்றன. இவர்கள் கைதுசெய்யப்படுகின்றார்களா என்பதுகூடத் தெரியாது. இவர்கள் கைதுசெய்யப்படுவதும் இல்லை. போதைவஸ்து எப்படிச் சர்வசாதாரணமாக வருகின்றது. இதை நாங்கள் ஐரோப்பிய யூனியன் வெளிவிவகாரத்துறைக்கும் கூறியிருந்தோம். எவ்வாறு இவ்வளவு பாதுகாப்பான சூழலில் வெளிப்படையாக இவ்வளவு விடயங்கள் நடைபெறுகின்றன.
ஆகவே கலாச்சார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக தமிழர்களை அழிக்கவேண்டும் என்று திட்டமிட்டு நடாத்தப்படுகின்றது. அடுத்தது தமிழர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதுடன் தமிழர்களைத் தங்கள் பேச்சைக் கேட்பவர்களாக மாற்றவேண்டும் அதாவது தமிழர்களை பயமுறுத்தி வைத்திருக்கவேண்டும். இவற்றை வழிநடத்துவது இராணுவத்தினர்தான் என்பதே உண்மை.
கிறிஸ் மனிதர்கள் என்று வந்தவர்கள் பின்னர் இராணுவ முகாமிற்குள்தான் ஓடுவார்கள். ஆகவே 2009 இற்குப்பின்னர் பல காலப்பகுதிகளில் பலவிதமான செயல்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு அங்கு இருக்கும் அதிகாரிகள், இராணுவத்தினர், ஆளுநர் எனப் பலரும் காரணமாக உள்ளனர்.
ஆளுநருக்கு ஒரு அதிகாரம் உள்ளது. அங்கே வன்முறை நடைபெறும் போது எப்படி அடக்குவது என்று. இவ்வளவு இராணுவத்தினர் இருக்கின்றார்கள். கோவிட் 19 வேளையில் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து மக்களைத் தாக்கக்கூடிய நீங்கள். அந்த மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவில்லையே. ஆகவே இவை அரச இயந்திரங்களுடன் சேர்ந்து நடாத்தும் ஓர் இன அழிப்பின் பகுதியாகவோ, அல்லது அந்த மக்களை இல்லாமல் ஆக்கும் ஒரு சிந்தனையாகத்தான் நாங்கள் பார்க்கவேண்டும்.
கோவிட் 19 நுண்கிருமியினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் பற்றி…?
இந்தக் கோவிட் 19 காலப்பகுதியில் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தாயகத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பல உதவி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பிரான்சிலும் எமது தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவோடு இணைந்து அவர்களுக்கு ஆதராவாக நாங்களும் செயற்பட்டோம். எங்களால் முடிந்த உதவிகளைச் செய்திருந்தோம்.
அதேநேரம் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சில் கோவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பல பகுதிகளிலும் பல உதவிகளைச் செய்திருக்கின்றது. ஆகவே தொடர்ச்சியாக எவ்வாறு எமது மக்களை இங்கேயும் அங்கேயும் பாதுகாக்கமுடியுமோ, அந்தளவிற்கான செயற்திட்டங்களை நிறைவேற்ற தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிற்கு எமது முழு ஆதரவையும் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். அது தொடர்ந்து நடைபெறும்.
கோவிட் 19 இன் பாதிப்பினால் பொருளாதார ரீதியில் எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் மீட்சிக்கான ஆலோசனைகளை வழங்குவீர்களா?
நிச்சயமாக. இந்தக் கோவிட் 19 காலப் பகுதியில் வதிவிட அனுமதிப் பிரச்சினை, மற்றும் ஏனைய வர்த்தக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளை எமது தமிழீழ மக்கள் பேரவை முற்றுமுழுதாக வழங்கும். எங்களால் முடிந்தளவிற்கு அலுவலக விடயங்களுக்கும் முற்றுமுழுதாக உதவியாக இருப்போம்.
ஆகவே தங்கள் பிரச்சினைகள், தேவைகள் எதுவாக இருந்தாலும் எங்கள் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்புகொண்டு, ஆலோசனை கேட்டால் அதற்குரிய வழிவகைகளை, எங்கே, யாருடன் பேசலாம், அல்லது எங்களால் முடிந்தால் நாங்களே அவர்களுடன் பேசி, அவர்களுக்கான உதவிகனைச் செய்துகொடுப்போம்.
நன்றி: ஈழமுரசு இணைய இதழ்