போர் முடிவடைந்த போதும் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசின் “மெளன யுத்தம்” தொடருவதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கை ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா ஆய்வு மையமான ஆக்லாந்து இன்ஸ்ட்டியூட் ‘போரின் நீண்ட நிழல்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 6 ஆண்டுகள் முடிவடைந்த போதும் அங்கு மௌன யுத்தம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது இலங்கை அரசு திட்டமிட்டே மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது. தமிழர் நிலங்களில் இராணுவக் குடியிருப்புகள் மற்றும் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 1,60,000 ராணுவத்தினர் தமிழர் பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது 6 தமிழர்களுக்கு 1 ராணுவத்தினர் என்கிற வகையில் படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தொடர்ந்தும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தே வாழ்கின்றனர். ஈழத் தமிழர்கள் இராணுவ நடமாட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் ‘இனஒதுக்கலுக்கும்’ தமிழ் மக்கள் உள்ளாகின்றனர். இத்தகைய ஒடுக்குமுறைகள் அனைத்தும் “இன்னொரு வகை மௌன யுத்தம்”தான்.. மனித உரிமை மீறல்கள் மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் எடுத்த முயற்சிகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை.
யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் குறித்த முறையான எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஒன்றிரண்டு பவுத்தர்கள் மட்டுமே இருக்கும் தமிழர் வாழ்விடங்களில் போர் வெற்றிச் சின்னங்களையும் பவுத்த விகாரைகளையும் இலங்கை அரசு அனுமதியுடன் அமைத்துள்ளனர். இத்தகைய நடவடிக்கையால் தமிழர்களின் பண்பாடு, கலாசரம், வரலாறு ஆகியவை திட்டமிட்டே நசுக்கப்படுகிறது, இதுவும் கூட ஒரு மௌனப் போரின் அறிகுறியே. தற்போதைய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை எதிர்கொண்டும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் அரசியல் ஆளுமை கொண்டவரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இறுதிப் போரில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்படும் 54ஆம் படையணியை வழி நடத்திய ஜகத் டயசுக்கு இராணுவத்தின் உயர் பதவிகளில் ஒன்றான மேஜர் ஜெனரல் பதவியை புதிய அரசாங்கம் வழங்கி இருப்பதானது, புதிய அரசாங்கம் போர்க்குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணைகளை பொறுப்போடும் ஜனநாயக வழியிலும் நடத்துமா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. வட கிழக்குப்பகுதிகளின் சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதுடன் ஏற்கனவே அமைக்கப்பட்ட குடியேற்றங்களை திரும்பப் பெறுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் நியாயப்படி நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவே.
அரசியல் நாடகங்களை நிறுத்தி சர்வதேச சமூகம் இலங்கை சிறுபான்மையினருக்கு மனித மற்றும் நில உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் பொறுப்பு. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home
சிறப்பு செய்திகள் ஈழத் தமிழர்கள் மீது தொடரும் இலங்கையின் “மெளன யுத்தம்”: அம்லப்படுத்துகிறது அமெரிக்க ஆய்வறிக்கை!