தாங்கிய வேர்கள் எங்கே?
தாலாட்டிய ஊர்கள் எங்கே?
பாலூட்டிய தாய்கள் எங்கே?
பாராட்டிய தந்தைகள் எங்கே?
யாருக்காய் அழுவது
யாரை நினைத்து முதலில் அழுவது
ஒன்றாய்க் கருகியதே
தமிழன் முகங்கள்
உலக நாடுகளால் – சாய்ந்ததே
எங்கள் யுகங்கள்!
பெயருக்கு நீதி கூறும்
பெரும் உலகத்தின் முன்
பெரும் போருக்குள் – விறகாய்
எரிந்ததே தமிழன் உடல்
உலகிற்கே உரைத்து சொன்ன
மாவீர புகழ்
கனவாகிப் போனதே
யார் செய்த செயல்
காலூன்றி நின்ற தேச விடுதலை
காணாமல் போனதெங்கே
அரை நூற்றாண்டாய்க் கட்டிய கோட்டை
கடுகதியில் புதைந்தது – அங்கே
கண்ணீரை விழி விழுத்தி அழுதாலும்
காயங்கள் மறைவதெங்கே!
புன்னகையைப் போலியாய்
உடுத்தி சிரித்தாலும்
புயல் ஒன்று உயிருக்குள்
உறங்குது – இங்கே!
தாயை இழந்தோம் – கண்முன்னே
தந்தையை இழந்தோம் –
உடன்பிறந்த உதிரங்களை இழந்தோம்
பேசி மகிழ்ந்த உறவை எல்லாம் இழந்தோம்
பாசிபடர்ந்த நிலமாய் மனம்
மூசிக்கிடக்க
எதை நினைந்து ஆறுவோம்
எப்படி மனம் மாறுவோம்?
காலா காலமாய் கழற்றி
வைக்க முடியாத கவலைகளை மட்டும்
ஈழம் கழுத்தில் அணிந்துள்ளது.
காலம் போற்றிப் பாடிய
கரிகால சோழ இனம்
இன்னும் ரணமாய் வாழ்கிறது!
என்றோ ஒரு நாள்
உலக வரைபடத்தில் ஈழக்
கொடியும் இடம் பிடிக்கும்
மண்ணுக்காய் உயிர் நீத்த
மானுடம் யாவும் மீண்டும்
பிறந்து – ஈழத்தினை அழகாய்
செதுக்கும்
அதுவரை
இந்த அழுகைகள் –
தொழுகையுடன் மட்டுமல்ல
புதிய எழுகையாய்
பொங்கிவரும்
கார்த்திகைக் காற்று ஒன்று
கரிகாலனாக ஆட்சி தரும்!
பரமலிங்கம் தனபாலன்