ஆந்திராவில் 20 தமிழர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்ற கூலித் தொழிலாளர்கள் 20 பேர் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி கடந்த ஏப்ரல் 7-ந் தேதியன்று அம்மாநில வனத்துறை, போலீசாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.
மேலும் தமிழக- ஆந்திரா எல்லையில் கூலித் தொழிலாளர்களை பேருந்தில் இருந்து இறக்கி கைது செய்து கொடூர சித்ரவதைகளுக்குப் பின்னர் சுட்டுக் கொன்றுவிட்டு செம்மரமே இல்லாத திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் உடல்களை கிடத்தி ‘செம்மர கடத்தல்காரர்கள்’ என ஆந்திரா ஜோடித்ததும் அம்பலமானது. இது தொடர்பான வழக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த படுகொலையில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நெஞ்சை பதற வைக்கும் இப்படுகொலைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமே முன்வந்து விசாரணையை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், 20 தமிழர் படுகொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்; சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.