சுற்றுலா வீஸாவில் வெளிநாட்டில் தொழில் புரிவதற்காக செல்ல முயன்ற 29 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி தகவல்களை சமர்ப்பித்து சுற்றுலா வீஸாவில் வெளிநாட்டுக்கு தொழில்புரிய செல்பவர்கள் குறித்து கிடைத்துவரும் தகவல்களையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள இது தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை வழங்கியிருந்தார். இதன்படி குறித்த 29 பேரும் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
கைதானவர்களிடையே 25 பணிப் பெண்களும் இரு ஆண்களும் இரு உப முகவர்களும் அடங்குகின்றனர்.
5 வயதுக்கு குறைவான பிள்ளைகள் உள்ள தாய்மாரே இவ்வாறு சுற்றுலா வீஸாவில் வெளிநாட்டுக்கு தொழில் பெற செல்ல முயன்றுள்ளதோடு இவர்கள் வவுனியா, தம்புள்ள, ருவன்வெல்ல, திருகோணமலை, களுவாஞ்சிக்குடி, அம்பாறை, சம்மாந்துறை பகுதிகளைச் சேர்ந்தவர் களாவர்.
அமைச்சர் தலதா அதுகோரலவின் ஆலோசனைக்கமைய கடந்த சில தினங்களில் இவ்வாறு 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா வீஸாவில் தொழில் தேடி செல்பவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை காணப் படுவதாக அமைச்சு தெரிவித்தது.