மன்னாரில் சாவடைந்த சகோதரிகளுக்கு நீதிகோரிப் போராட்டம்!

0
750

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, பரப்பான் கண்டல் சந்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் திகதி இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். குறித்த விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த இரு சகோதரிகளின் மரணத்துக்கும் நீதி கோரி குடும்ப உறவுகள் நேற்று (15) வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் சமூக இடை வெளிகளை பேணி, பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

எனினும் சம்பவ இடத்துக்கு சென்ற மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்கள் ஒன்று கூடி இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்றும் அங்கிருந்து உடனடியாக செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும், அவர்கள் அவ்விடத்தில் இருந்து செல்லாத நிலையில் பொலிஸாரின் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 16 பேர், மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதோடு, இவ்வாறான போராட்டங்களை தற்போதைய சூழ் நிலையில் செய்ய முடியாது என எச்சரித்ததோடு, பிரச்சினை தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் உதவியை நாடுமாறு கோரிக்கை விடுவித்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here