முள்ளிவாய்க்கால் மண்ணதிலே
மாண்டுபோன உறவுகளே
மீளமுடியா துயர்கொண்டு
நெஞ்சடைத்து நிற்கின்றோம்.
ஏதுமறியா பாலகர்கள்
என்னபாவம் செய்தார்கள்?
அஞ்சிநடுங்கும் பிஞ்சுகளை
அள்ளிக்கட்டியது அவலமன்றோ?
கொத்துக்குண்டு வெடிக்கையிலே
குற்றுயிராய் போனவர்கள்
செத்துமடியும் கணங்களைத்தான்
சொல்லியழ முடியலையே?
கஞ்சிகூட உணவாக
சாப்பிடவே வழியுமற்று
அஞ்சிவாழ்ந்து செத்தவாழ்க்கை
மிஞ்சியது எத்தனையோ?
வெள்ளைக் கொடி கட்டி
வெளியே வரச்சொல்லி
வந்துநின்றோர் வாழ்வுதனை
என்ன செய்தாய் சிங்களமே?
ஒரு உடுப்பும் இல்லாமல்
அலைய வைத்த படையினனே
உனை பெத்த உயிரும்
பெண் என்று மறந்தனையோ?
இன்னும் எத்தனையோ
இன்றுவரை சிறைவாழ்வில்
என்ன நடந்ததென்று
தெரியாமல் எத்தனையோ?
கொட்டிலில் வாழ்ந்து
கொஞ்சசோறு உண்டாலும்
எடுப்பான வாழ்க்கையாய்
எப்படி வாழ்ந்திருந்தோம்?
தர்மம் சாகாது
தலைகாத்து நிற்குமென்று
முன்னோர் சொல்லியது
பொய்யாக போனதுவோ?
எல்லாம் ஒருநொடியில்
இல்லாமல் போனதேனோ?
வல்லான் இறைவனும்
இல்லாமல் போனானே?
– கீதன் இளையதம்பி –