விழியோரம் நீர் கசிய கனத்த மெளனம் மனதெங்கும் படர்கின்றது!

0
900

ஓடி ஓடியே அவலங்களையும், நெஞ்சம் நிறைய வலிகளையும் சுமந்தபடியே மாண்டு போன உறவுகளின்
இறுதிநிமிடங்களைப்பற்றிய நினைவுகள் மனம் முழுவதும் பெரும் துயரையும் , இனவழிப்பு செய்தவன்மீது அளவற்ற கோபத்தையும் உண்டுபண்ணுகின்றது.

இன்றுவரையுமான உலகத்தமிழினத்தின் கையறு நிலை மனமெங்கும் விரக்தியாக படிந்திருக்கின்றது.

எத்தனை கனவுகள், எத்தனை எதிர்பார்ப்புக்களுடன் வாழ்வினுள் காலடிவைத்த எண்ணற்ற சிறார்களை திட்டமிட்டு இனவழிப்பு செய்த சிங்களம் வெற்றி மமதையில் இன்றுவரை வெறியாட்டம் ஆடுகின்றது.

எம்மினம் 2009 இல் பெற்ற அவலங்களை வெளிப்படுத்தும் வார்த்தைகளை பதிவிட கை நடுங்குகின்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் சிங்கள, இந்திய அரசுகளின் வெறித்தனமும்,
தமிழர்களின்மீதான இனவழிப்பு அவலங்களும் மிகச்சரியாக ஆவணப்படுத்தப்படவேண்டும்.

உலகின் சகல மொழிகளிலும் ,
ஒவ்வொரு நொடியிலும் உயிர்துடிப்பு அடங்கிப்போன ஒன்றரைஇலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் வலி, வேதனை, கண்ணீர் ,கதறல் என சகல உணர்வுகளும் மிகச்சரியாக பதியப்படவேண்டும்.

2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு பற்றி ஒவ்வொரு தமிழ் இளையவர்களிற்கும் எடுத்துக்கூறப்பட்டால் எம் உறவுகளின் அன்றைய பெரும் அவலத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

புலம்பெயர் தேசங்களிலெல்லாம் சகல துறைகளிலும் கோலோச்சும் எம் இளையவர்கள் எம்மினத்தின் வலியினை தம் கரம்கொண்டு துடைப்பார்கள் என்னும் பெரு நம்பிக்கை உலகத்தமிழினத்திற்குண்டு.

நாம் இழப்பதற்கு இனி எதுவுமில்லை
ஆனால்,
பெறுவதற்கு நிறையவே உள்ளது…

அன்பரசன் நடராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here