இடர்காலத்தில் அர்ப்பணித்து செயற்பட்டவர்கள் மதிப்பளிப்பு!

0
236

பிரான்ஸில் தொற்று நோய்கள் பரவும் சமயத்தில் தங்களை அர்ப்பணித்து சேவையாற்றும் குடிமக்களுக்கு பதக்கம் வழங்கி கெளரவிக்கும் பாரம்பரியம் 135 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

நேற்று புதன் கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் இத் தகவல் வெளியிடப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றினை முறியடிப்பதற்காக முன்னரங்கில் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ சேவையாளர்கள் உட்பட அத்தியாவசியப் பணிகளில் தம்மை அர்ப்பணித்தவர்களை வரும் ஜூலை 14 சுதந்திர நாளன்று கெளரவித்து மரியாதை செலுத்துவதற்கு அரசு தீர்மானித் திருக்கிறது.

இதற்காக 1885 இல் வழக்கத்தில் இருந்த தொற்றுநோய்ப் பதக்கம் (la médaille des épidémies) வழங்கும் அரச நடைமுறை மீண்டும் பின்பற்றப்படவுள்ளது.

பிரான்ஸில் தேசியக்கொடியின் மூவர்ண நிறங்களிலான பட்டியுடன் சேர்த்து பதக்கங்களை வழங்கும் நடைமுறை 1885 இல் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. அச்சமயம் நாட்டின் தென் பகுதிகளில் வாந்திபேதி(cholera) நோய்பரவியிருந்த சமயத்தில் அதைக் கட்டுப்படுத்துவதற்காக தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்களுக்கு முதன்முதலாக பதக்கங்கள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் 1914-1918 காலப்பகுதியில் முதலாம் உலகப்போர் சமயத்தில் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட படையினரைப் பராமரித்து சிகிச்சை அளிப்பதில் பங்காற்றிய இராணுவ மற்றும் சிவில் பணியாளர்களுக்கும் இவ்வாறு பதக்கங்கள் வழங்கப்பட்டுவந்தன.

அதன் பிறகு வழக்கொழிந்துபோயிருந்த தொற்றுநோய்ப் பதக்கம் வழங்கும் பாரம்பரியம் சுமார் 135 ஆண்டுகள் கடந்து தற்போதுதான் மீண்டும் அறிமுகமாகின்றது.

பாரிஸ் ஊடகங்கள் இத்தகவல்களை வெளியிட்டுள்ளன.

14-05-2020 (குமாரதாஸன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here