செய்யாத குற்றத்தை, செய்ததாக குற்றம் சுமத்தியதால், மனவேதனையுற்ற 21 வயது இளைஞன் தூக்கிட்டு உயிரை மாய்த்த சம்பவம் மட்டக்களப்பில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவு கோரகள்ளிமடு பிரதேசத்தில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமைதூக்கும் தொழில் செய்துவரும் தந்தை,
விறகு வெட்டும் தொழில் செய்யும் தாய். இவர்களின் மகனான மகேந்திரன் சுஜிவன் என்ற இளைஞனே பரிதாபமாகத் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
சென்ற வாரம் காட்டுக்குள் விறகு வெட்டச்சென்ற இவரது தாய்,
அக்காட்டுக்குள் பைப்லைன் செய்யப்பட்ட ஒரு தொகுதி குழாய்கள் வீசப்பட்டுக்கிடப்பதை அவதானித்து, தனது மகனிடம் தெரிவிக்க,
அதனை நண்பர்கள் இருவருடன் சென்று எடுத்து வந்து தனது வீட்டுவாசலில் வைத்திருக்கிறார்.
இதனை அவதானித்த அயல் வீட்டார், இவ் இளைஞர்கள் இக் குழாய்களைத் திருடி வந்திருப்பதாகக் கருதி ஏற்கனவே குழாய்களைக் களவுகொடுத்த கிரானைச் சேர்ந்த நபரிடம் விடயத்தை தெரிவிக்க, பொலிஸ் நிலையம் வரை முறைப்பாடு சென்று, விசாரித்தபின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இளைஞர்களை,
நேற்று (12/05/2020) மதியம் கிரானை சேர்ந்த நபர் வலுக்கட்டாயமாக குறித்த இளைஞர்களை உந்துருளியில் அழைத்துச்சென்று, களவெடுத்ததை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்திய நிலையில், வீடு திரும்பிய இளைஞன்
மன உளைச்சலுக்குள்ளாகித் தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மகனை காணவில்லையென கிரானை சேர்ந்த அந்த நபரின் வீட்டுக்குப் பெற்றோர் சென்றபோது, அவர்களைக் கால்களால் உதைத்து அனுப்பியதாகவும் அழுதழுது தெரிவித்தனர்.