13.05.2020 தொடக்கம் 18.05.2020 வரை தமிழினப்படுகொலை வாரமாக அனுஸ்டிக்குமாறு அழைப்புவிடுகின்றோம்.
12.05.2020
மே-18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திலிருந்து – இலங்கைத்தீவானது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியதாகவும் – இந்தத் தீவிலே பௌத்த மதத்தை மட்டுமே தூய்மையாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டுமென்ற தார்மீகப் பணியை – தம்மிடம் வழங்கியுள்ளதாக கூறி – சிங்கள பௌத்த பேரினவாதம் அதனை நிறைவேற்றுவதில் மிகவும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
தமிழர் இலங்கைத் தீவிலே தேச அந்தஸ்தோடு நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருப்பதானது, சிங்கள- பௌத்த தீவு என்ற தமது கனவுக்கு தடையாக உள்ளதாகக் கருதி – பிரித்தானியர் இலங்கைத்தீவை விட்டு வெளியேறிய காலத்திலிருந்து கடந்த 70 வருடங்களுக்கு மேலாக – சிங்கள தேசத்தில் தலைமைத்துவத்துக்கு மாறி வந்த அனைத்து தரப்பினரும் தமிழ் இனவழிப்பையே செய்து வந்திருக்கிறனர்.
‘தமிழ் தேச’ அந்தஸ்தை இல்லாமல் செய்யும் சிறிலங்கா அரசின் அத்தகைய முயற்சியையே – தமிழ் மக்கள் இனப்பிரச்சினையாக அடையாளப்படுத்துகின்றார்கள்.
‘தமிழ் தேச’ அங்கீகாரம் பெறுவதற்காக – களத்திலே போராடிக்கொண்டிருந்த எங்கள் விடுதலைப் போராளிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு – பெருமளவிலான தமிழ் மக்களின் உயிர்களையும் சேர்த்து – முள்ளிவாய்க்காலில் மனித படுகொலைகள் மூலம் அழித்தனர்.
இது சிறிலங்கா அரசு இதுவரை காலமும் மேற்கொண்ட இனவழிப்பின் உச்ச அடையாளமாகும்.
தமிழ் இனவழிப்பு முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு வரவில்லை. மாறாக – ‘தமிழ் தேச’ அந்தஸ்தை – வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இல்லாமல் அழிப்பதற்காக – கடந்த 2009 ற்குப் பின்னரான 11 ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிறிலங்காவின் அனைத்து ஆளும் தரப்புக்களுமே செயற்பட்டு வந்திருக்கின்றன.
இன்று அதனுடைய வெளிப்பாடாகவே – பொளத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல், காணி அபகரிப்பு, கலாசார அழிப்பு, பொருளாதார அழிப்பு, போதைப்பொருள் திணிப்பு போன்ற செயற்பாடுகள் தீவிரம் பெற்றுவருகின்றது.
இந்த நிலையில் – முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற உயிரழிப்பினை இனப்படுகொலை தினமாக, ‘மே 18’ தமிழ் இனப்படுகொலையின் ஒரு அடையாளமாக நினைவுகூரும் அதேசமயம் –
இனவழிப்பானது ஏனைய வடிவங்களில் தொடர்ந்தும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்ற செய்தியை – உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு – தமிழ் தேச மக்களுக்கு இருக்கின்றது.
எனவே – இந்த இனவழிப்பு நாளில் எம் உறவுகளை நினைவு கூரும் அதேவேளை, இந்நாளில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒன்றுகூடி இனப்டுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டுமென வலியுறுத்துவோம்.
அந்த வகையில் 13.05.2020 தொடக்கம் 18.05.2020 வரை தமிழினப்படுகொலை வாரமாக அனுஸ்டிக்குமாறு அழைப்புவிடுகின்றோம்.
இவ்வார காலத்தில் – தமிழ்த் தேசத்தில் இடம்பெற்ற படுகொலைகளை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
இறுதி நாளான 18.05.2020 அன்று முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தக் கூயடிவர்களை அங்கு சென்று நினைவுகூரலில் கலந்து கொள்ளுமாறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) கட்சியினராகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
புலம்பெயர்ந்து உலகம் பூராகவும் வாழும் தமிழ் மக்களையும், தமிழக உறவுகளையும் இந்த நினைவேந்தலை தங்கள் நாடுகளில் மேற்கொள்வதன் மூலம் இனப்படுகொலைக்கு நீதி கோரும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறும் கோருகின்றோம்.
கொரோனா நெருக்கடியான இக்காலப்பகுதியில் – அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான சுகாதாரத்துறையினரின் அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி